மு.கு. எப்பொழுதும் போல தான். கதை சின்னது தான், கதாபாத்திரங்களை பற்றிய அறிமுகம் கொஞ்சம் விவரமாக எழுதி இருக்கிறேன் . ரத்தின சுருக்கமா இருக்க வேண்டாம் என முடிவு செய்து, படிப்பவர்களுக்கு ஆர்வம் உண்டாக்கும் படியாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு (படித்து விட்டு சொல்லுங்கள்)
கதாபாத்திரம் 1: முருகன்
முருகன் திருச்சி பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, படித்து, (நகரத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்) அங்கேயே வாழ்ந்து கொண்டிருப்பவன். தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்து ஓட்டுநர். திடமான உடல், பொறுமையாக சிந்தனை செய்யும் குணம் உடையவன். பள்ளி படிப்பு தனது கிராமத்திலே அரசு பள்ளியில் முடித்து, கல்லூரி படிப்பை திருச்சியில் முடித்தான். கிராமப்புற வளர்ப்பு சூழல் என்பதால் அவனுக்கு நீச்சல் தெரியும், விவசாய பம்பு செட்டுகளை சரி செய்வான், தச்சு வேலை வரும், நண்பரின் workshoப்பில் வண்டி பழுது பார்த்திருக்கிறான். கூட்டு குடும்பத்தில் வளர்ந்ததனால் உறவுகளை நேசிப்பவன். அவன் ஊரில் பாடல் பெற்ற சிவாலயம் ஒன்று இருக்கிறது. அந்த கோயில் திருவிழாவில் மாணிக்கவாசகரின் பாடல்களை மனம் உருகி பாடுவான். கைபேசியில் தேவையான youtube வீடியோக்களை பார்ப்பான், அதன் மூலம், சில அரசு திட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டு, தானும் அதனால் பயன்பெற்று, தன் ஊர்காரர்களும் அந்த திட்டங்கள் பற்றி சொல்லி பயனடைய செய்திருக்கிறான். அதற்காக அரசு அலுவலங்கள் சென்று, விண்ணப்ப படிவம் பெற்று, வேண்டிய கோப்புகளை சேர்த்து, விண்ணப்பித்து வெற்றி பெற்றிருக்கிறான். (இதில் என்ன வெற்றி என்று நினைப்பவர்களுக்கு கதாபாத்திரம் 2 காத்திருக்கிறது). செய்தித்தாள் தவறாமல் படிப்பான், அரசியலை உன்னிப்பாக கவனிப்பான். பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை, ஒரே கட்சிக்கு வாக்களிக்காமல், சூழலுக்கு ஏற்ப யோசித்து சிறந்த வேட்பாளருக்கு வாக்களிப்பான். விடுமுறை நாட்களில், வேறு மொழி பேசும் ஊர்களுக்கு செல்வது அவனுக்கு பிடிக்கும். மாத சம்பளம் (பிடிப்பு போக): இருப்பெத்தெட்டாயிரத்து சொச்சம்.
கதாபாத்திரம் 2: தீபிகா
தீபிகா, வயது முப்பதுக்கு கீழ் தான். சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிபவள். வீடு கீழ்பாக்கம், ஒரு அடுக்ககம். மும்பை ரயில்களில் பயணம் செய்வோர்க்கு இது நன்கு தெரியும்: நீங்கள் இறங்க வேண்டிய இடம் வரும் பொழுது, நீங்கள் கதவருகில் நிற்கும் கூட்டத்தில் போய் நின்றால் போதும், உங்கள் முயற்சி இல்லாமல், உங்கள் உந்துதல் இல்லாமல், உங்கள் சம்மதம் இல்லாமல், தானாக நீங்கள் இறக்கி விட படுவீர்கள். அது போல ஒரு குறிப்பிட்ட காலத்தில், பள்ளியில் அறிவியல் குரூப் எடுத்தால் போதும்: தனியார் பொறியியல் கல்லூரிக்கு நான்கு வருடம் கல்லூரி பேருந்து, செமஸ்டர் பரீட்சை, ஐடி கம்பெனி கேம்பஸ் இன்டெர்வியூ என்று தானாக சென்று, படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாமல் ஒரு வேலையில் நீங்கள் இருப்பர்கள். அப்படிப்பட்ட முறையில் விமான நிலையங்களில் சுற்றும் கன்வேயர் பெல்ட் மேல் உள்ள பையை போல தன்னிச்சை இல்லாமல், எல்லாமே தீர்மானிக்கப்பட்டு, ஒரு வேலைக்கு செல்பவள் தான் தீபிகா. தன் வேலையை தவிர ஒன்றுமே தெரியாதவள். காலையில் இன்னோவா காரில் ஏறி வேலைக்கு சென்று இரவில் அதே காரில் வீட்டுக்கு அசதியாக வருவாள். தூங்குவாள், விழிப்பாள், ரிபீட்டு! சனி ஞாயிறுகளில் மிச்ச மீதி தூக்கம், ஓய்வு. உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் தெரியாது. நாட்டின் குடியரசு தலைவர் யார் என்று கேட்ட போது: கடைசி நினைவு அப்துல் கலாம் என்பாள். இருசக்கர வாகனம்....இல்லை இல்லை, எந்த சக்கர வாகனமும் ஓட்ட தெரியாது. ஹமாம் சோப்பு வாங்க கூட பொட்டி கடைக்கு போனதில்லை. சென்னையில் எப்பொழுது மழை காலம் என்று கூட தெரியாது. உறவினர்களை வருடத்திற்கு ஒரு முறை கல்யாணங்களில் பார்ப்பாள். பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் பேச நேரம் இல்லை. பேருந்து, ரயில், விமானம் டிக்கெட் வாங்க கூட தெரியாது. கேட்டால்: "இதெல்லாம் எதுக்கு தெரிஞ்சுக்கணும்? வெளியே போக ஓலா, சாப்பிட ஸ்விக்கி, பணம் செலுத்த gpay, வேற என்ன வேணும்?" என்பாள். அதையெல்லாம் கைபேசியில் பதிவிறக்கம் செய்தது அப்பா. உடற்பயிற்சி செய்வது கிடையாது, நடப்பதே இல்லை, எதிர்வீட்டு ஆள் பெயர் தெரியாது, பொருளாதாரம் தெரியாது, பக்தி கிடையாது, அரசியல் நாட்டம் இல்லை, தன் உடலை பேணி காக்க தெரியாது. "ழ"னாவும் தெரியாது, "ஷ"னாவும் தெரியாது, பேரு மட்டும் சுப்ரமணிய பாரதி வகையறா. சம்பளம் : ரெண்டே முக்கா லட்சம்
நிற்க :
1. இதை படிக்கும் சிலருக்கு, இப்படி எல்லாம் பிள்ளைங்க இருப்பாங்களா? இது மிகை என தோணலாம்.
2. மேலும் சிலருக்கு, "எங்க வீட்டுல நடக்கறத அப்டியே சொல்றியேபா" என்றும் தோணலாம்
3. இப்படி வாழ்ந்தா தான் என்ன? இதனால என்ன தப்பு? என்றும் தோணலாம் :)
கிளை கதாபாத்திரம் 2A: தீபிகாவின் பெற்றோர்கள்:
இப்படி ஒரு கதாபாத்திரம் இருந்தால், இவளை கையில் தாங்கும் ஒரு கதாபாத்திரம் இருக்க வேண்டுமே? அறுபது வயதிற்கு மேலான அவளின் பெற்றோர் இருவரின் வேலையும் தீபிகாவிற்கு வேண்டிய அனைத்தையும் பார்த்து கொள்ளுதல். சமையல், சமையலுக்கு உண்டான பொருட்களை வாங்குதல், தீபிகாவுக்கு வேண்டிய பொருட்களையும் வாங்குதல் (தீபிகாவிற்கு, தனக்கு என்ன வேண்டும் என்பதே தெரியாது), துணிமணிகளை வாஷிங் மெஷினில் துவைத்தல், தினம் இஸ்திரி போட்டு அவளுக்கு வைத்தல், அவளின் சம்பளத்தை ஒழுங்காக முதலீடு செய்தல், அலுவலகத்தில் வருடா வருடம் வருமான வரி சம்பந்தமான கோப்புகளை சமர்ப்பித்தல் போன்ற வேலைகளை timetable போட்டு தவறாமல் செய்பவர்களே அந்த மகானுபாவுலுக்கள்! வாழ்க்கை நாம் யாவரையும் தன் பாணியில் சீர் படுத்தும். சிலரை வருடி கொடுத்து செய்யும். சிலரை "வேதம் புதிது" படம் போல் கன்னத்தில் நாலு அறை விட்டு செய்யும். இதை நன்கு அறிந்தவர்கள் தீபிகாவின் பெற்றோர்கள்.
கதாபாத்திரம் 3: பேருந்து
தனுஷ் படம் மாதிரி இந்த கதையில் பேருந்து ஒரு முக்கிய பாத்திரம். முருகன் வேலையில் சேர்ந்த நாள் முதல், இன்று வரை, ஓட்டும் வாகனம். அவதார் படத்தில் ஜேக் ஒரு பறக்கும் மிருகத்தின் வாலை தன் வாலுடன் சேர்ப்பது போல் முருகனும் பேருந்தும் இணைந்த கைகள். பேருந்து என்பது ஒரு குறியீடு, அதில் செல்லும் மக்களையும், மக்களின் மனதில் இருக்கும் அனைத்தையும் சுமந்து செல்வது. கோபமும், காதலும், சோகமும், சோம்பேறித்தனத்தையும். .....philosophy எல்லாம் வேண்டாம்...உங்களுக்கு, முருகனுக்கும் பேருந்துக்கும் இருக்கும் உறவு புரிந்திருக்கும். தற்செயலாக ஏதோ ஒரு நாளில் அந்த பேருந்தில் நீங்கள் ஏறினால், இந்த உரையாடல்கள் கேட்கும்:
"தலைவன் second half ல மாஸ் காட்டிட்டான்" சினிமா விமர்சனங்கள்
"அரசியல் எல்லாம் உணர்வு சார்ந்த விஷயம், அறிவு சார்ந்தது இல்ல, அதனால தான், இவரு இப்படி அர்த்தமா பேசினா டெபாசிட் கூட வாங்க மாட்டாரு" என்று வாக்காளர்களின் collective intelligenceஐ குறைத்து மதித்து, புது கட்சி தொடங்கியவரின் வெற்றி தோல்வி சாத்தியக்கூறுகளை விவாதித்தனர்
"கடவுள் நேரே வந்தாருனு வையு, அவர தோள் மேல கைய போட்டு, பக்கத்து ஓட்டல்கு போய், ரெண்டு காபி சொல்லி, நிறைய கேள்வி கேக்கணும்" என்று இரண்டு பேர்.
"என்னா வெயில் பா?? நான் சின்ன வயசுல இருக்கும் போது இவ்வளவு இல்ல பா" என்ற climate change வாக்குமூலங்கள்
இப்போது கதைக்கு வருவோம், சிறுகதை தான் :
ஞாயிற்றுகிழமை மாலை, bruce almighty படம் ஓடி கொண்டிருக்க, morgan freeman அதிசயம், அற்புதம் (Miracle) பற்றி பேசி கொண்டிருக்க, முக்கிய கட்டத்தில் தீபிகா pause செய்தாள். "என்ன பெரிய அதிசயம்?" என்றாள். தீபிகா அவள் பெற்றோர்களிடம் பேசும் போது ஒரு மரியாதையற்ற தன்மை இருக்கும். கதாபாத்திர அறிமுகத்தை படித்த உங்களுக்கு "இந்த மாதிரி வேலை செய்யறவங்க இப்படி தான் இருப்பாங்க" என்ற கவுண்டமணி டயலாக் ஞாபகம் வரும். "நான் கடைக்கு போய், ஒரு deodarant வாங்கிட்டு வரேன்" என்றாள். "அதிசயம், அற்புதம்" என்று தீபிகாவின் அம்மா முணுமுணுத்தாள்.
சென்னையில் நடக்கும் தமிழ் மாநாட்டிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட, முருகன் திருச்சியில் இருந்து சென்னைக்கு பேருந்து இயக்கி வந்திருந்தான். சென்னை நகரத்திற்குள் நுழைந்ததும் பேருந்து தனக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்ற சமிஞையை முருகனுக்கு கொடுத்தது.
தீபிகா அவள் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இறங்கி வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்து எதிரே உள்ள கடைக்கு செல்ல முற்பட்டாள். முருகன் செலுத்தி வந்த கட்டுப்பாடு இல்லாத பேருந்து அவள் கண்ணில் பட, முக்கியமாக கவனத்தில் பட இல்லாத தருணம்.
முருகனுக்கு பேருந்து முழு கட்டுப்பாடு இன்னும் சில நேரம் தான் இருக்கும் என்று தெரிந்து கொண்டான். அவன் பதட்டப்படாமல் மூளையை செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தான். பேருந்தில் ஓட்டுநர் பக்கத்தில் ஒரு ஒற்றை இருக்கையை நீங்கள் கவனித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அங்கே ஒரு சில பேர் மட்டுமே அமர விருப்ப படுவார்கள். ஓட்டுநர் பக்கத்தில் இருக்கும் gearboxஇல் இருந்து ஒரு அனல் காற்று வீசும். அதை தாங்கி கொண்டு, முழு சாலையின் காட்சியின் மீது உங்களுக்கு காதல் இருந்தால் மட்டுமே அங்கே உட்காருவீர்கள். (என் சிறுவயதில் ஒரு முறை நான் APSRTC பேருந்தில் அவ்வாறு பயணம் செய்த்திருக்கிறேன். திருப்பதியில் இருந்து திருமலைக்கு ghat road இரவு பத்து மணிக்கு மேல் சாலையில் சென்றது இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது)
கதைக்கு வருவோம், முருகனின் நிலையை அந்த பிரத்யேக ஒற்றை இருக்கை ஆசாமி உணர்ந்து கொண்டார். "என்ன சார்? ஏதாவது பிரச்சனையா?" என்றார். முருகன் அவரை ஒரே ஒரு கணம் தான் பார்த்தான். அவருக்கு, இந்த இக்கட்டான சூழ்நிலையை மேற்கொள்ளும் தன்மை உண்டென நம்பினான். சில பேரின் கண்ணை பார்த்தால் அவர்களின் சமநிலையை அறியலாம் என்று நாம் அறிவோம். முருகன், "பேருந்து இடிச்சு தான் நிக்க போகுது, நீங்க கொஞ்சம் எல்லாரையும் உஷாராக்குங்க" என்றான். அவர் துடிப்புடன் செயல்பட்டார். முதல் இரண்டு வரிசையில் உள்ளவர்களை மெல்ல பின்னே செல்ல சொன்னார். பேருந்தின் நிலைமை அனைவருக்கும் தெரிய தொடங்கியது. சிலர் பதட்டம் அடைய போகிறார்கள் என்றும் தெரிந்ததே. அவர் சத்தமாக, "பேருந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது மரத்திலோ, கட்டிடத்திலோ இடித்து நிற்க போகிறது. நீங்கள் கம்பியை பிடித்து கொள்ளுங்கள். பை இருந்தால், உங்கள் முகம், தலை எதிரே உள்ள கம்பியில் பிடிக்காத வண்ணம் வைத்து கொள்ளுங்கள்" என்று தற்காலிக airbag ஏற்பாடு செய்ய சொன்னார்.
தீபிகா சாலையின் ஒரு பாதியை கடந்து நடுவில் நின்று, மறுபாதியை கடக்க முற்பட்டாள்......ஒரே ஒரு நிமிடம் நிற்க. நான் கதாபாத்திரம் 4 - Dr இனியன் அவர்களை அறிமுகம் செய்யவில்லை. இனியன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அவசர பிரிவில் வேலை செய்யும் ஒரு மருத்துவர். அவர் அன்றாட வாழ்வில், பதட்டத்திற்கு பஞ்சமே இல்லை. பெரும்பாலும், தீக்காயம் பட்டவர்களும், சாலை விபத்தில் அடிபட்டவர்களும் தான் அவரின் சந்திப்பாளர்கள். அவரிடம் வரும் போது அவர்கள் உடலில் அடிபட்டு நசுங்கி இருக்கும் நிலைமையை சொன்னால், காலையில் சாப்பிட்ட பொங்கல் வெளியே வந்து விடும்.
முருகனும், அந்த ஒ.இ, ஆசாமியும் சேர்ந்து அந்த பயணிகளை தயார் நிலையில் வைத்து விட்டார்கள். அடுத்து முருகன் ஒரு நல்ல இடமா பாத்து இடிக்க வேண்டும். அந்த கட்டத்தில் பேருந்தை சென்று கொண்டிருக்க, தீபிகா சாலையின் இரண்டாம் பகுதியை கடக்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தாள். முருகனின் பேருந்து தீபிகா நிற்கும் இடத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் வந்து கொண்டிருந்தது. அவள் சாலையை கடப்பதை ஓட்டுநர் பார்த்தால், பேருந்தை நிதானமாக்கினால் தீபிகா எளிதாக கடந்து விடுவாள். அந்த கட்டத்தில், தீபிகா இரண்டு மூன்று அடி எடுத்து வைக்க, முருகன் கண்ணில் அவள் தென்பட்டாள், ஆனால் பேருந்தை நிதானமாக்க முடியவில்லை என்ற உண்மை தீபிகாவுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.
சில கணங்களில், தீபிகாவின் முதுகை ஒரு மூதாட்டி தட்டி, "நீ குமார் சார் பொண்ணு தானே?" என்று கேட்டாள். தீபிகா சாலையை கடக்க முற்பட்டதை நிறுத்தி, யார் அந்த பாட்டி என்ற யோசனையில் ஆழ்ந்தாள். "இல்ல இல்ல" என்று மறுத்து, மீண்டும் சாலையை கடக்க முற்பட்ட போது, முருகனின் பேருந்து அவளை கடந்து நாற்பது அடி சென்றிருந்தது.
முருகன் திறமைசாலி, ஞாயிற்று கிழமை, பள்ளி விடுமுறை என்று நன்கு அறிந்து, ஒரு பள்ளியின் ராட்சசத்தனமான கதவில் இடித்து பேருந்தை நிறுத்தினான். பேருந்து கண்ணாடி நொறுங்கியது, சிலருக்கு சிறு காயம் தான் ஏற்பட்டது. Sully பட Tom Hanks போல் செயல்பட்டு அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்தான். பேருந்தில் வந்த முதியவள் முருகனை பாராட்ட, அவன் "நான் என்ன பண்ணேன்?, எல்லாம் மேல இருக்கவன் செய்தது" என்று மனமார சொன்னான் . மறுநாள் செயதித்தாளில் நான்காம் பக்கத்தில், இரண்டு வரியில் "அதிசயமாக ஐம்பது பிரயாணிகளும் தப்பித்தனர் "என்ற செயதி வந்தது.
தீபிகா deodrant வாங்கி வீட்டுக்கு வந்தாள், அவள் Dr இனியனை சந்திக்கவே இல்லை. மறுநாள், அலுவலகத்தில் Fun at work நிகழ்ச்சி என்பதால் நீல நிற டி ஷர்ட் அணிந்து சென்றாள். அதில் இருந்த வாசகம்: "There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle"
பி கு: Final destination பட பாணியில் optimisticஆக ஒரு blog எழுத வேண்டும் என்ற முயற்சி. :)
I laughed at almost every para..right from மகானுபாவுலுக்கள் and Vedham pudhidhu.. My life is going like Deepika only.. more or less..
ReplyDelete