Sunday, 13 July 2025

அற்புதம்

 

காட்சி ஒன்று

இரண்டாவது பீரியட் பெல் அடிக்கும் முன்னே, தலைமையாசிரியர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெஞ்சமின் அந்த பட்டியலை வகுப்பு ஆசிரியர் மேரி அவர்களிடம் நீட்டினார். அதில் நான்கைந்து ரோல் நம்பர்கள் இடம்பெற்றன. அதை வாசித்தவுடன், அந்த மாணவர்கள் பள்ளி அலுவலகத்திற்கு வரவழைக்கப் பட்டனர். அங்கே மற்ற வகுப்பை சேர்ந்தவர்களும் இருந்தனர், மொத்தம் பனிரெண்டு மாணவர்கள். "பள்ளி திறந்து ஒரு மாதத்திற்கு மேலே ஆகுது, ஏன் இன்னும் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை? இந்த எட்டு பேர் இந்த பக்கம் நில்லுங்க, நீங்க இன்னும் பணம் செலுத்தி புத்தகங்கள் வாங்கலியே?". அத்தனை மாணவர்கள் முகத்திலும் விடையே இல்லை, வாடி போய் இருந்தது.  "உங்கள் அப்பா - அம்மாவை நாளைக்குள் பணம் செலுத்த சொல்லுங்க" என்று சொல்லி அவர்களை வகுப்புக்கு அனுப்பி வைக்க, அங்கிருந்து கிளம்பினால் போதுமென்று அனைத்து மாணவர்களும் தங்களுடைய வகுப்பிற்கு ஓடினர். மேரி என்ற ஆசிரியை staff ரூமில் கவலையுடன் அமர்ந்திருந்தார். "மேரி நீ ஏன் இன்னும் சாப்பிடல?" என்று french ஆசிரியை சுஜாதா கேள்வி கேட்க, மேரி "என் வகுப்பில் சில மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தவே இல்லை, அலுவலகத்தில் இருந்து தினம் கேட்கறாங்க". "அதுக்கென்ன, அவங்க பெற்றோர்க்கு தகவல் சொல்ல வேண்டியது தானே?" "அந்த குழந்தைங்க பெரும்பாலும் "single parent children". ஒவ்வொருத்தர் குடும்ப கதையும் ஒவ்வொரு மாதிரி இருக்கு" என்று மேரி வருத்தப்பட்டார். இதை படிக்கும் போது "ஐயோ கடவுளே" என்று நீங்கள் நினைத்தால், அதே போல் தான் சுஜாதா மேடமும் நினைத்தார்.

 

காட்சி இரண்டு

மறுநாள் அதே இரண்டாவது பீரியட், அதே பெஞ்சமின், அதே ரோல் நம்பர். மாணவர்கள் தயக்கத்துடன் எழுந்து கொள்ள: "நீங்க அலுவலகத்துக்கு போய் நீங்க பள்ளி கட்டணம் கட்டிய ரசீதை உடனே வாங்கிக்குங்க. புத்தகத்துக்கு பணம் கட்டியவங்க, அதையும் வாங்கிண்டு வாங்க" என்றார். மாணவர்களுக்கு நடந்ததென்றே புரியவில்லை!

 

பாத்திரங்கள் அறிமுகம்

சுஜாதா மேடம் (1999ல் நான் பள்ளி படிப்பை முடித்தேன்)

நான் "French" மொழியை தேர்ந்தெடுக்காததால் சுஜாதா மேடம் வகுப்பில் இருந்ததே இல்லை. பள்ளியில் குடியரசு தினம், ஸ்போர்ட்ஸ் டே, பரிசளிப்பு தினம் போன்ற நிகழ்ச்சிகளில் நான் அறிவிப்பாளனாகவோ, prayer பாடும் குழுவிலோ, நன்றியுரை, வரவேற்புரை என்று ஏதாவது ஒரு எடுபுடி வேலையிலாவது இருப்பேன். சுஜாதா மேடம் இதற்கெல்லாம் பொறுப்பாசிரியராக இருப்பார், அவர்களுடன் என்னுடைய உரையாடல்கள் அந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் நடக்கும் போது மட்டுமே. அந்த குழுவில் "the usual suspects" ஆக இருப்பதும் என் நண்பர்களே. அவர்கள் சுஜாதா மேடம் வகுப்பில் பயில்வதனால்,  சுஜாதா மேடம் மாணவர்களிடம் நேசத்துடன் அணுகும் விதத்தை விவரிப்பார்கள்.

 

பாலாஜி

பாலாஜி என்னுடைய பள்ளியில் என் வகுப்பில் படித்தவன், பிறகு நாங்கள் தொடங்கிய கிரிக்கெட் அணியிலிருந்து வெளியேறாமலும், ஒய்வு பெறாமலும் இருக்கும் இருவரில் ஒருவன் (இன்னொருவன் நான் தான்). அசாத்திய தைரியசாலி, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் இருக்கும் குணமுடையவன். நண்பர்களின் திருமணத்திற்கு பரிசு பொருள் வாங்குதல், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டால், "இன்று உன் பேர் சங்கிலி இல்ல, கங்குலி" வடிவேல் காமெடி பாணியில் திடீர் நியமனம் செய்தல், முன்னாள் மாணவர்களின் நிகழ்ச்சி ஏற்பாடு, வேலை தேடுபவர்களின் CV நண்பர்களுக்கு whatsapp மூலம் அனுப்புதல் போன்ற உபத்திரம் மிக்க வேலைகளை சற்றும் சலிக்காமல் செய்யும் குணமுடையவன். நான் அவனை 1997ல் சந்திக்கும் போது இருந்த உற்சாகத்தை தொலைக்காமல் வைத்திருப்பவன்.

 

ஷங்கர் ராமன்

நான் CA பயின்ற போது, articleship என்ற மூன்று வருடங்கள் நடைமுறை பயிற்சி முறை இருந்தது. ஒரு பட்டைய கணக்காளரிடமோ (Chartered Accountant) அல்லது பட்டைய கணக்காளர்கள் கொண்ட நிறுவனத்திடமோ பயிற்சி பெற வேண்டும். நான் 2003 ஆண்டிலிருந்து 2006 வரை, ஒரு சர்வதேச நிறுவனத்தில் பயிற்சி பெற்றேன். அப்போது ஷங்கர் ராமன் என்பவர் அதில் Senior Manager ஆக பணி புரிந்தார். நான் பயிற்சி பெற்ற முதல் இரண்டு வருடங்கள் அவர் அமெரிக்காவில் இருந்தார், பின்னர் சென்னைக்கு வந்தார். நாங்கள் செய்யும் Audit வேலையில் எந்த சந்தேகம் வந்தாலும் நாங்கள் அணுகும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். நாங்கள் மாணவர்கள் தானே என்று எங்களை ஏளனமாக பார்க்க மாட்டார், “வெட்டு ஒன்று - துண்டு ரெண்டு என்று பேசுபவர். (Audit துறையில் இவ்வாறு பேசுபவவர்கள் மிகவும் அரிதே, பெரும்பாலானவர்கள் குன்ஸாகவே பேசுவார்கள்). 2006 க்கு பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை, இன்று ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை குழு பொறுப்பில் உள்ள அவர், நான் அவ்வப்போது போடும் உருப்படியான whatsapp status, social மீடியா அறிவிப்புகளுக்கு பதிலளிப்பார்.

 

 

வரதன்

2006 முதல் 2009 வரை நான் வேலை செய்த வங்கியில் ஒரு உயர் பொறுப்பில் இருந்தவர், ரொம்ப நேராக பேசுபவர், எளிமையானவர். நகரத்தின் நடுவே இருந்த எங்கள் வங்கியின் அலுவலகம், புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டது. அப்போதெல்லாம் அவருடன் காரில் தொற்றிக்கொண்டு செல்வேன். செல்லும் வழியெல்லாம் வெவ்வேறு செய்திகளை பற்றி பேசுவோம். அலுவலக வேலையில் என்னிடம் இருந்த பலவீனங்களை ஒளிவு மறைவின்றி சொல்லி திருத்தி கொள்ள சொல்வார். நான் இல்லாத போது தான் என்னை பற்றி பாராட்டுவார் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் வாழ்த்து whatsapp மூலம் தெரிவிப்பதை தவிர கடந்த 16 வருடங்களில் அவரை நான் நேரில் சந்திக்கவே இல்லை.

 

நாகமஹந்த்

என் மாணவனின் திருமணத்திற்கு சென்ற போது (திருமணம் திருவரங்கத்தில் நடந்தது), எனக்கு தங்கும் விடுதி, வாகனம் ஏற்பாடுகளுக்காக அவனுடைய நண்பனான நாகமஹந்தின் தொலைபேசி எண்ணை கொடுத்தான். நான் அங்கு தங்கவில்லை. நான் வெவ்வேறு பணிகள் மற்றும் கோவில் தரிசனம் செய்து முடித்து, சரியாக முகூர்த்த நேரத்திற்கு மட்டுமே சென்றேன். நாகமஹந்த்திடம், ஒரே ஒரு முறை, திருமண மண்டபத்திற்கு செல்லும் வழி கேட்க பேசினேன். அவனை திருமணத்தில் சந்தித்த ஞாபகம் கூட இல்லை. இது நடந்தது சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்.

 

கிரிக்கெட் தொடர்பு

பிரசன்னா என்பவன் எங்கள் கிரிக்கெட் அணியில் முன்னொரு காலத்தில் விளையாடியவன். உடல்நிலை, வேலை சம்பந்தமான சிக்கல்கள் பலவற்றை வாழ்க்கை கொடுக்க, அதையெல்லாம் திடமாக சந்தித்து அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருபவன். வாழ்வை போராடி வெல்லும் எண்ணத்தை அவனிடம் இருந்து கற்று கொள்ளலாம். பெரும்பாலும் தொலைபேசியில் ஓரிருரண்டு வாரத்திற்கு ஒரு முறை பேசுவோம்.

 

சாய் எங்கள் தற்போதைய கிரிக்கெட் அணியின் பும்ரா. விளையாட்டு மைதானத்திலும், என் வகுப்பறையிலும் நான் என்னை முழுவதாக மறந்து விடுவேன். மைதானத்தில் விளையாடும் போது, உங்கள் உண்மையான பண்புகளை மறக்கவே முடியாது, தானாக வெளிப்படும் என்று என் தம்பி சொல்வதுண்டு. அதற்கு உதாரணமானவன் சாய். நேரம் தவறாமல் வருவது, ஈகோ என்ற உணர்வில்லாமல் அனைவரிடமும் பழகுவது என தன்னுடைய இயல்பிலேயே அனைவரிடம் நட்பு கொள்வான்.

 

என் முன்னாள் மாணவர்கள்

 

CA தேர்வை தாண்டுவதில் சிலருக்கு பிரத்யேக சிக்கல் இருக்கும், அது மற்றவர்களுக்கு புரியாது. கண்ணில் விழுந்த சிறிய தூசி போல. மற்றவர்கள் "ஊதி விடு" சரியாகி விடும் என்று அலட்சியமாக சொல்லிவிட்டு செல்வார்கள். சிரமத்திற்கு உள்ளானவர்களுக்கே அது எவ்வளவு உறுத்தும் என்று தெரியும். என்னுடைய வகுப்பில் படித்த சில மாணவர்களிடம், இந்த தொந்தரவை புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில், நான் கற்று கொண்ட சில யுக்திகளை கடத்தியுள்ளேன். அவர்களின் சொந்த முயற்சியினால் தேர்வில் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருக்கும் மாணவர்களில் கீழ்க்காண்பவர்களும் உண்டு:

 

சித்தார்த்: இவன் என் வகுப்பிற்கு வந்தது நிச்சயம் பத்து முதல் பனிரெண்டு வருடங்கள் இருக்கும். சமீபத்தில் ஒரு உணவகத்தில் சந்தித்த போது, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறினான்.

 

கோபால் மற்றும் ஸ்ரீவித்யா: 2006ல் தொடங்கிய என்னுடைய முதல் வகுப்பை சேர்ந்தவன் கோபால். அவனும் அவன் மனைவி ஸ்ரீவித்யாவும் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருபவர்கள். வரி சம்பந்த பட்ட எந்த ஒரு சந்தேகத்திற்கும் நான் இவர்களை தான் அணுகுவேன். இருவரும் பணிவான குணமடையவர்கள்.

 

பதஞ்சலி: CA தேர்வு வெற்றி பெற்று, தனக்கு விரும்பிய துறையில் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிபுரிபவன், துடிப்பான இளைஞன். பத்து நாட்களுக்கு ஒரு முறை அவன் கண்ணில் நான் பட்டு விடுவேன்.

 

சங்கரன்: 2012 அல்லது 2013 காலகட்டத்தில் என் வகுப்பில் படித்தான், பிறகு அவனுடன் எந்த தொடர்பும் இல்லை.

 

இரண்டு காட்சிகளுக்கு இடையே நடந்தது

சுஜாதா மேடம், இந்த மாணவர்களின் தேவைகளை பற்றி எனக்கு அனுப்பி, "ஏதாவது செய்ய முடியுமா என்று பார் என்று whatsapp செய்தி அனுப்பினார். நான் முறையே, இந்த வேலைக்கே அளவெடுத்து செய்யப்பட்ட, பாலாஜிக்கு அனுப்பினேன். அவன் முன்னாள் மாணவர்கள் சிலரிடமும், எங்கள் பொது நண்பர்களான ஸ்ரீகுமார் மற்றும் பைதிக் அவர்களிடமும் உதவி பெற்று கொடுத்தான்.

நான் மேலே குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் வெவ்வேறு காலகட்டத்தில் தொடர்பில் இருந்தாலும், அன்றாட உரையாடல்கள் இல்லை. சிலரிடம் வருட கணக்கில் தொடர்பே இல்லை என்பதை நீங்கள் உணரலாம். மாணவர்களுக்கு உதவி தேவைஎன்று  நான் வைத்த whatsapp status இவர்கள் அனைவரின் கண்ணில் பட்டு, அதற்கு உடனடியாக அவர்கள் நானும் என் பங்கிற்கு பணம் அனுப்புகிறேன் என்று கூறியது, சித்தார்த் தன் சகோதரனிடமும் அவன் நண்பர்களிடமும் தகவல் கூறி உதவி பெற்று கொடுத்தது, அந்த மாணவர்களை பார்க்காமல், யாரென்றே தெரியாமல், அனைவரும் உதவிக்கரம் நீட்டியது, ஒரு இரண்டு மூன்று மணி நேரத்தில் பள்ளியின் வங்கி கணக்கில் செலுத்தியது,  என நடந்ததை நினைத்து பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. “There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle.”  என்பது நிரூபணம் ஆகிறது. இந்த பிரபஞ்சத்தின் பெரும் சக்தியிடம் (Super intelligent design) சரணடைவோம்.

பின்குறிப்பு இல்லாம முடிக்கவே மாட்டேன்!

நாடோடிகள் படம் climax: மாலை நேர நடைப்பயிற்சி முடித்து விட்டு, மொட்டைமாடியில் அமர்ந்து கொண்டு twitterல் நியூஸ் மேய ஆரம்பித்தேன் (நான் twitterல் நியூஸ் மற்றும் மீம்ஸ் பார்ப்பதற்கு மட்டுமே உபயோகிப்பவன்). யாரென்றே தெரியாமல், ஒரு random tweet கண்ணில் பட்டது - ஒரு  இளநிலை பட்டம் பெற்ற மாணவிக்கு, முதுநிலை பட்டபடிப்பிற்க்கான நுழைவு தேர்வில் வெற்றி கிடைத்து - புத்தகம், தங்கும் விடுதி போன்ற செலவுக்கு பணம் தேவை. Equaliser படத்தை பல முறை பார்த்து, Random act of kindness மேல் நம்பிக்கை வைத்த எனக்கு அது Godsent தருணங்களில் ஒன்றாக பட்டது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை அந்த மாணவிக்கு சொல்லியனுப்பி, மிக சிறிய பண உதவியையும் செய்தேன். 

No comments:

Post a Comment

ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...