Context setting:
இந்த கட்டுரையை படிக்கும் முன்னால் நீங்க கொஞ்சம் சூழல் அமைப்பை புரிஞ்சிக்கணும். நான் ஸ்கூல் படிக்கும் போது தமிழ் இரண்டாம் பேப்பர் பரீட்சை, எனக்கு பிடிச்ச பேப்பர். அதுக்கு ரெண்டு காரணம். இந்த பேப்பர்ல இலக்கணம், கொஞ்சம் non-detail கதைகள் மற்றும் பொது கட்டுரை வரும். இதுக்கு நிறைய நேரம் படிக்க வேண்டாம். அதனால இந்த பரீட்சைக்கு முன் நாள் கிரிக்கெட் விளையாட அனுமதி உண்டு. தவிர, எனக்கு கட்டுரைகள் எழுத பிடிக்கும். முன்னுரை, பொருளுரை போட்டு பாகம் பாகமா பிரிச்சு, கடைசில முடிவுரைல ஒரு பஞ்ச் வெச்சு எழுதுவேன். பரீட்சைல கடைசி கேள்வியா பத்து மார்க்குக்கு வரும். ஆனால் நான் அதை முதல்லியே எழுதுவேன். அப்புறம் ஒரு விஷயம்: பரீட்சை முடிஞ்சு பேப்பர் வரும் போது அதை என் அம்மா review பண்ணுவாள். அதை போல ஒரு robust review system கிடையாது. தோனி கேக்கற reviewவே ரெண்டாம் ரேங்க்னா பாத்துக்கோங்க. நான் சாய்ஸ்ல விட்ட கேள்வியை ஏன் படிக்கலனு கேள்வி கேட்டு கோபித்து கொள்வாள். பேப்பர் திருத்தும் வாத்தியார் எல்லாம் reviewல வருவாங்க. கையெழுத்து பார்த்து மார்க் போடுபவர்கள், அளவை பார்த்து மார்க் போடுபவர்கள், படித்து பார்த்து மார்க் போடுபவர்கள் என்று வகை படுத்தி, அதுக்கு ஏத்தாற்போல் நான் எழுத வேண்டும். எல்லா பேப்பர் போல இந்த தமிழ் ரெண்டாம் பேப்பர் இருக்காது. என் கையெழுத்து ரொம்ப மோசமாக இருக்கும். பெரும்பாலும் என் கட்டுரைகளை என் ஆசிரியர்கள் படிக்க மாட்டார்கள். (மூன்று வகையை பாருங்கள், அந்த மூன்றாம் வகை வாத்தியாரால் என் கையெழுத்தை படிக்கவே முடியாது). தோராயமாக ஆறு இல்ல ஏழு மார்க் போடுவார்கள். ஆனால் இந்த பொது கட்டுரைய முழுதா படிச்சு பாத்து சந்தோஷப் படுவாள் என் அம்மா. சில நேரங்களில் என் பாட்டியும் படித்து பார்ப்பாள்.
முன்னுரை:
இப்போ இன்றைய தேதிக்கு வருவோம். நான் கட்டுரை எல்லாம் எழுதியது சன் டிவில சுரேஷ் சக்கரவர்த்தியும் பெப்சி உமாவும் வந்த காலம். இந்த கொரோனா சிக்கல் நடுவுல, திடீர்னு ஒரு எண்ணம் தோன்றியது. இப்போ என்னால ஒரு பொது கட்டுரை வேகமா எழுத முடியுமானு ஒரு கேள்வி. இந்த மாதிரி உருப்புடாத சந்தேகம் எல்லாம் இரவு திடீர்னு மூணு நாலு மணிக்கு தான் எல்லாருக்கும் வரும்னு தெரியும். உடனே மனசு: காகம்னு ஒரு தலைப்பு எடுத்து, திடீர்னு ஒரு பேப்பரும் பேனாவும் கொடுத்தா என்ன எழுதலாம்? மூணே முக்காலுக்கு தூக்கம் முற்றிலும் கலைந்து, மூளை சுறுசுறுப்பாகி யோசிக்க தொடங்கியது. எடுத்து எழுதுவோமானு கூட நினச்சேன். அப்புறம் ஒரு frame போட்டு வெப்போம்னு முடிவுக்கு வந்தேன். காகத்தை பத்தி என்ன எழுதலாம்னு நான் முடிவுக்கு வந்தது:
1. "காக்கை குருவி எங்கள் சாதி" நான் எப்பொழுதும் சொல்லி கொண்டிருக்கும் பாரதியின் அற்புத வரிகள். தமிழ்மொழியின் பெருமை, பாரதியின் அசாதாரணமான வார்த்தை ஜாலம், நானோ டெக்னாலஜி போல ஒரு ரெண்டு வார்த்தைகளில் உணர்வுகளை deepsea diving செய்யும் திறன் என்றெல்லாம் எழுதலாம்னு ஒரு யோசனை.
2. காக்கா பிரியாணி சாப்பிட்டா உன்னி கிருஷ்ணன் குரலா வரும்னு ஒரு மைய்ய கருத்தை வெச்சி, சமூகத்தில உள்ள inequality, herd immunity, கையேந்தி பவன்கள், வாழ்வாதாரம்னு கொஞ்சம் நகைச்சுவை கலந்த கலந்த சமூக நிதர்சனத்தை எழுதலாம்னு ஒரு யோசனை.
3. சுஜாதா எழுதாத விஷயமே இருக்காது. ஏன் எதற்கு எப்படி ல கண்டிப்பா ஒரு கேள்வியாவது காக்காவை பத்தி இருக்கும்னு தெரியும். அதை தேடி எடுத்து, அதை பத்தி எழுதலாம்னு ஒரு யோசனை.
4. முயலும் ஆமையும் கதையை எடுத்து, அதை கொஞ்சம் தட்டி பூசி, மேனேஜ்மென்ட் கருத்துக்களை தருவது போல பத்து powerpoint ஸ்லைடு போட்டு கொள்ளும் நிறைய பேர் உண்டு. நாம் அதே போல் காக்கா வடை பாட்டி கதையை செய்வோமா என்ற ஒரு யோசனை. உடனே இது அவுட் ஆயிட்டு நடந்து போகாம அம்பயரை பாக்கற மாதிரி கேவலமா இருக்கும்னு மறு யோசனை.
5. சிறு வயதில, சங்கர் என்ற நண்பன் எனக்கு உண்டு. எனக்கும் அவனுக்கும் நாலடியார்ல சொல்றா மாதிரி பொதுவான கருத்துக்கள் நிறைய உண்டு. கிரிக்கெட் உடம்பில ரத்தமும், சதையுமா பிணைஞ்சி இருக்கும். டெண்டுல்கர் கேட்ச் ஒன்று, ஜான்ட்டி ரோட்ஸ் ஆகாயத்துல பறந்து பிடிச்சு கீழே விழும் போது பால் தரையில விழுந்ததானு சந்தேகம். ரோட்ஸ் இல்லனு சொல்ல, கொஞ்சம் குழப்பத்துக்கு அப்புறம் அம்பயர் அவுட் குடுத்துடவார். Replayல சரியா எதுவும் சொல்ல முடியாது. லாரலா ஏநியானு ஒரு குழப்பம். அந்த நிகழ்வு பத்தியும், அதை பத்தி நானும் சங்கரும் நடத்திய விவாதத்தை பத்தியும் nostalgic கட்டுரை ஒன்று எழுதலாம்னு ஒரு யோசனை. (சங்கர் ஓட nickname காக்கா)
6. காக்கா கிட்ட நாம் எல்லாரும் கத்து கொள்ள வேண்டிய பாடங்களில் முக்கியமான ஒன்று: பகிர்ந்து உண்ணுதல். கொரோனா காலத்தில இது எவ்வளவு relevantனு ஒரு உணர்ச்சி பொங்கும் கட்டுரை எழுதலாம்னு ஒரு யோசனை.
கட்டாயம் ஏதாவது ஒன்றை வைத்து நாளை எழுதுவோம்னு ஒரு முடிவுக்கு வந்து, முதல் நாள் வாட்ஸாப்ப்ல வந்த "ஏதோ மோகம்" பாட்டு வயலின் ஞாபகத்துக்கு வர, அதிகாலை தூங்கினேன்.
முடிவுரை (பஞ்ச்)
நீங்கள் படித்ததை போல், என் கட்டுரைகளில் எல்லாம், தலைப்புக்கும் எழுதியதுக்கும் மெல்லிசான சம்பந்தம் தான் இருக்கும். விக்ஸ்ங்கறது தான் இப்படி சுத்தி சுத்தி எழுதியிருக்கேன் பாணியில் இருக்கும். இந்த கட்டுரை எல்லாம் சுமாராக தான் இருக்கும். என் வாத்தியார் படித்து பார்த்திருந்தாலும் ஆறு ஏழு மார்க்கே அதிகம் என்ற முடிவுக்கு வந்திருப்பார். ஆனால், எனக்கு இந்த உண்மை புரியும் போது தலை நரைத்து விட்டது. இந்த கட்டுரைகள் எல்லாம் என் அம்மாவுக்கு பிடித்தது ஏனோ? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!
:) As usual, your style...
ReplyDelete