Monday, 4 May 2020

காகம்





Context setting:
இந்த கட்டுரையை படிக்கும் முன்னால் நீங்க கொஞ்சம் சூழல் அமைப்பை புரிஞ்சிக்கணும். நான் ஸ்கூல் படிக்கும் போது தமிழ் இரண்டாம் பேப்பர் பரீட்சை, எனக்கு பிடிச்ச பேப்பர். அதுக்கு ரெண்டு காரணம். இந்த பேப்பர்ல இலக்கணம், கொஞ்சம் non-detail கதைகள் மற்றும் பொது கட்டுரை வரும். இதுக்கு நிறைய நேரம் படிக்க வேண்டாம். அதனால இந்த பரீட்சைக்கு முன் நாள் கிரிக்கெட் விளையாட அனுமதி உண்டு. தவிர, எனக்கு கட்டுரைகள் எழுத பிடிக்கும். முன்னுரை, பொருளுரை போட்டு பாகம் பாகமா பிரிச்சு, கடைசில முடிவுரைல ஒரு பஞ்ச் வெச்சு எழுதுவேன். பரீட்சைல கடைசி கேள்வியா பத்து மார்க்குக்கு வரும். ஆனால் நான் அதை முதல்லியே எழுதுவேன். அப்புறம் ஒரு விஷயம்: பரீட்சை முடிஞ்சு பேப்பர் வரும் போது அதை என் அம்மா review பண்ணுவாள். அதை போல ஒரு robust review system கிடையாது. தோனி கேக்கற reviewவே ரெண்டாம் ரேங்க்னா பாத்துக்கோங்க. நான் சாய்ஸ்ல விட்ட கேள்வியை ஏன் படிக்கலனு கேள்வி கேட்டு கோபித்து கொள்வாள். பேப்பர் திருத்தும் வாத்தியார் எல்லாம் reviewல வருவாங்க. கையெழுத்து பார்த்து மார்க் போடுபவர்கள், அளவை பார்த்து மார்க் போடுபவர்கள், படித்து பார்த்து மார்க் போடுபவர்கள் என்று வகை படுத்தி, அதுக்கு ஏத்தாற்போல் நான் எழுத வேண்டும். எல்லா பேப்பர் போல இந்த தமிழ் ரெண்டாம் பேப்பர் இருக்காது. என் கையெழுத்து ரொம்ப மோசமாக இருக்கும். பெரும்பாலும் என் கட்டுரைகளை என் ஆசிரியர்கள் படிக்க மாட்டார்கள். (மூன்று வகையை பாருங்கள், அந்த மூன்றாம் வகை வாத்தியாரால் என் கையெழுத்தை படிக்கவே  முடியாது). தோராயமாக ஆறு இல்ல ஏழு மார்க் போடுவார்கள். ஆனால் இந்த பொது கட்டுரைய முழுதா படிச்சு பாத்து சந்தோஷப் படுவாள் என் அம்மா. சில நேரங்களில் என் பாட்டியும் படித்து பார்ப்பாள்.

முன்னுரை:

இப்போ இன்றைய தேதிக்கு வருவோம். நான் கட்டுரை எல்லாம் எழுதியது சன் டிவில சுரேஷ் சக்கரவர்த்தியும் பெப்சி உமாவும் வந்த காலம். இந்த கொரோனா சிக்கல் நடுவுல, திடீர்னு ஒரு எண்ணம் தோன்றியது. இப்போ என்னால ஒரு பொது கட்டுரை வேகமா எழுத முடியுமானு ஒரு கேள்வி. இந்த மாதிரி உருப்புடாத சந்தேகம் எல்லாம் இரவு திடீர்னு மூணு நாலு மணிக்கு தான் எல்லாருக்கும் வரும்னு தெரியும். உடனே மனசு: காகம்னு ஒரு தலைப்பு எடுத்து, திடீர்னு ஒரு பேப்பரும் பேனாவும் கொடுத்தா என்ன எழுதலாம்? மூணே முக்காலுக்கு தூக்கம் முற்றிலும் கலைந்து, மூளை சுறுசுறுப்பாகி யோசிக்க தொடங்கியது. எடுத்து எழுதுவோமானு கூட நினச்சேன். அப்புறம் ஒரு frame போட்டு வெப்போம்னு முடிவுக்கு வந்தேன். காகத்தை பத்தி என்ன எழுதலாம்னு நான் முடிவுக்கு வந்தது:




1. "காக்கை குருவி எங்கள் சாதி" நான் எப்பொழுதும் சொல்லி கொண்டிருக்கும் பாரதியின் அற்புத வரிகள். தமிழ்மொழியின் பெருமை, பாரதியின் அசாதாரணமான வார்த்தை ஜாலம், நானோ டெக்னாலஜி போல ஒரு ரெண்டு வார்த்தைகளில் உணர்வுகளை deepsea diving செய்யும் திறன் என்றெல்லாம் எழுதலாம்னு ஒரு யோசனை.

2. காக்கா பிரியாணி சாப்பிட்டா உன்னி கிருஷ்ணன் குரலா வரும்னு ஒரு மைய்ய கருத்தை வெச்சி, சமூகத்தில உள்ள inequality, herd immunity, கையேந்தி பவன்கள், வாழ்வாதாரம்னு கொஞ்சம் நகைச்சுவை கலந்த கலந்த சமூக நிதர்சனத்தை எழுதலாம்னு ஒரு யோசனை.

3. சுஜாதா எழுதாத விஷயமே இருக்காது. ஏன் எதற்கு எப்படி ல கண்டிப்பா ஒரு கேள்வியாவது காக்காவை பத்தி இருக்கும்னு தெரியும். அதை தேடி எடுத்து, அதை பத்தி எழுதலாம்னு ஒரு யோசனை.

4. முயலும் ஆமையும் கதையை எடுத்து, அதை கொஞ்சம் தட்டி பூசி, மேனேஜ்மென்ட் கருத்துக்களை தருவது போல பத்து powerpoint ஸ்லைடு போட்டு கொள்ளும் நிறைய பேர் உண்டு. நாம் அதே போல் காக்கா வடை பாட்டி கதையை செய்வோமா என்ற ஒரு யோசனை. உடனே இது அவுட் ஆயிட்டு நடந்து போகாம அம்பயரை பாக்கற மாதிரி கேவலமா இருக்கும்னு மறு யோசனை.

5. சிறு வயதில, சங்கர் என்ற நண்பன் எனக்கு உண்டு. எனக்கும் அவனுக்கும் நாலடியார்ல சொல்றா மாதிரி பொதுவான கருத்துக்கள் நிறைய உண்டு. கிரிக்கெட் உடம்பில ரத்தமும், சதையுமா பிணைஞ்சி இருக்கும். டெண்டுல்கர் கேட்ச் ஒன்று, ஜான்ட்டி ரோட்ஸ் ஆகாயத்துல பறந்து பிடிச்சு கீழே விழும் போது பால் தரையில விழுந்ததானு சந்தேகம். ரோட்ஸ் இல்லனு சொல்ல, கொஞ்சம் குழப்பத்துக்கு அப்புறம் அம்பயர் அவுட் குடுத்துடவார். Replayல சரியா எதுவும் சொல்ல முடியாது. லாரலா ஏநியானு ஒரு குழப்பம். அந்த நிகழ்வு பத்தியும், அதை பத்தி நானும் சங்கரும் நடத்திய விவாதத்தை பத்தியும் nostalgic கட்டுரை ஒன்று  எழுதலாம்னு ஒரு யோசனை. (சங்கர் ஓட nickname காக்கா)

6. காக்கா கிட்ட நாம் எல்லாரும் கத்து கொள்ள வேண்டிய பாடங்களில் முக்கியமான ஒன்று: பகிர்ந்து உண்ணுதல். கொரோனா காலத்தில இது எவ்வளவு relevantனு ஒரு உணர்ச்சி பொங்கும் கட்டுரை எழுதலாம்னு ஒரு யோசனை.

கட்டாயம் ஏதாவது ஒன்றை வைத்து நாளை எழுதுவோம்னு ஒரு முடிவுக்கு வந்து, முதல் நாள் வாட்ஸாப்ப்ல வந்த "ஏதோ மோகம்" பாட்டு வயலின் ஞாபகத்துக்கு வர, அதிகாலை தூங்கினேன்.

முடிவுரை (பஞ்ச்)

நீங்கள் படித்ததை போல், என் கட்டுரைகளில் எல்லாம், தலைப்புக்கும் எழுதியதுக்கும் மெல்லிசான சம்பந்தம் தான் இருக்கும்.  விக்ஸ்ங்கறது தான் இப்படி சுத்தி சுத்தி எழுதியிருக்கேன் பாணியில் இருக்கும். இந்த கட்டுரை எல்லாம் சுமாராக தான் இருக்கும். என் வாத்தியார் படித்து பார்த்திருந்தாலும் ஆறு ஏழு மார்க்கே அதிகம் என்ற முடிவுக்கு வந்திருப்பார். ஆனால், எனக்கு இந்த உண்மை புரியும் போது தலை நரைத்து விட்டது. இந்த கட்டுரைகள் எல்லாம் என் அம்மாவுக்கு பிடித்தது ஏனோ? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!

Thursday, 13 February 2020

ஏதோ விளக்கங்கள்

மு.கு:

ரொம்ப வருடம் கழித்த blog! என்னுடைய வழக்கமான விஷயங்கள் போல் இல்லாமல் கொஞ்சம் educational content, வயலும் வாழ்வும் போல பொருளாதார விளக்கங்கள், கொஞ்சம் lucid attempt!

ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு கல்லூரியில், ஏதோ ஒரு வகுப்பில் நடந்ததை பார்ப்போம். அந்த ஆசிரியர் ராணிமுத்து calendar முருகன் போல ரொம்ப சாந்தமாக இருந்தார். மாணவர்கள் அவரை கிண்டல் செய்வதை கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. Attendance எடுத்து முடிப்பதற்காக காத்திருந்த மூன்று பேர் சினிமா பார்க்க கிளம்பினார்கள். கொஞ்சம் கூர்ந்து கவனிப்போம், வாருங்கள்.

Friends, இந்த வருஷம் கடைசிக்கு வந்துட்டோம், அடுத்த வருஷம் வேலைக்கு போக நிறைய பேர் plan பண்ணிருப்பீங்க. உங்க எல்லாரையும் கொஞ்சம் employableஆ தயார் பண்ணிக்கணும் .

சார் உங்களுக்கே ஒரு வேலை கிடைக்கும் போது, எங்களுக்கு கிடைக்காதா? (சிரிப்பு சத்தம்) 

RBI கவர்னர், பைனான்ஸ் மினிஸ்டர் இவங்களோட மீடியா சந்திப்பு பாருங்க. பொருளாதாரம் படிக்கற பசங்க நாட்டு நடப்பு எல்லாம் கூர்ந்து கவனிக்கணும். பட்ஜெட் பாருங்க, நல்ல பிசினஸ் பேப்பர் படிங்க.

சார் அதெல்லாம் எங்களுக்கு புரிய மாட்டேங்குது.

என்ன டா புரியல?

எதுவுமே புரியல. திடீர்னு பேப்பர் படிக்க சொன்னா நாங்க என்ன பண்றது? பின் பெஞ்சுல நாயகன் பட BGM வாயில வாசித்தான் ஒருவன். அதுல இருக்கற வார்த்தை (terms) புரிய மாட்டேங்குது.

(ஒவ்வொரு வார்த்தை அவர் பேசும் பொழுது கிண்டலாக சொன்ன விஷயங்களை இனி நான் எழுத போவது இல்லை. ஒரு புரிதலுக்காக இது வரை எழுதினேன்)

பொருளாதாரம் பத்தி படிக்க ஆரம்பிக்க சில விஷயங்கள தெரிஞ்சிகிட்டா போதும். முதல்ல நாட்டோட ஜிடிபி - இது தான் நாட்டோட மொத்த உற்பத்தியோட டோட்டல். ஒரு வீட்டோட வருமானம் மாதிரி. இந்தியா மாதிரி  பெரிய நாட்டில இதை மெஷர் பண்றது ரொம்ப முக்கியம். நாம எல்லாரும் நல்லா இருக்கணும்னா இந்த ஜிடிபி வளந்துக்கிட்டே போகணும்

சார், அப்போ விலைவாசிக்கும் ஜிடிபிக்கும் சம்பந்தம் இருக்கா?

ஒரு உதாரணத்துக்கு ஒருத்தன் ஒரு தொழில் செஞ்சு ஒரு வருஷத்துக்கு 20 டன் உற்பத்தி பண்றான்னு வெச்சுப்போம். அதை ஒரு வருஷத்தில ஒரு குறிப்பிட்ட விலைக்கு விக்கறான். டன் 1900 ரூபானு வெச்சுப்போம். அடுத்த வருஷம், அவன் போன வருஷ 20 டன் உற்பத்திய விட அதிகம் பண்றது அவசியம். விலை 2000 ரூபானு போய் அதே 20 டன் உற்பத்தி பண்ணினால் நிஜமான வளர்ச்சி இல்ல. அதனால தான் ஜிடிபி பத்தி தெரிஞ்சுக்கும் போது விலைவாசியையும் சேத்து பாக்கணும்.

fiscal deficitனா என்ன சார்?

அரசாங்கம் வருஷா வருஷம் ஒரு பட்ஜெட் போடுது. அது அரசாங்கத்துக்கு வரவு செலவு கணக்கு. செலவு விட வரவு கம்மியா இருந்தா அது fiscal deficit

அப்போ என்ன பண்ணுவாங்க சார் ?

உங்க வீட்டில இந்த மாதிரி ஆனா என்ன பண்ணுவீங்க ?

கழுத்து செயின ஹிந்தி படிக்க அனுப்புவோம் சார்

அதே தான், deficit னு சொல்றது பற்றாக்குறை, அதுக்கு கடன் வாங்க வேண்டியது தான்

அப்போ அது நல்லதில்லையே சார் ?

ஆமாம் நல்லது இல்ல. ஆனா அத சூழ்நிலைக்கு ஏத்தா மாதிரி பாக்கணும். உங்க வீட்டு பட்ஜெட்ல பற்றாக்குறை இருக்கு. உங்க காலேஜ்  பீஸ் கட்டாம இருந்தா பற்றாக்குறை இருக்காது. படிப்ப நிறுத்திடலாமா? அந்த மாதிரி மருந்து செலவு, குடிநீர், உணவு இந்த மாதிரி எவ்வளவோ செலவு இருக்கு. வளரும் நாடுகள்ல ஒரு அளவுக்கு பற்றாக்குறை இருப்பது நல்லது. அது நாம வரவுக்கு அதிகமா செலவு பண்றோம், நல்ல எதிர்காலத்துக்காக.

சார் அப்போ நிறைய கடன் வாங்கி எல்லாரும் நல்லா இருக்கலாமே ?

யாரு கடன் கொடுப்பா ? நமக்கு கடன் குடுப்பவங்க நம்ம பட்ஜெட்ட பாக்க மாட்டங்களா?

அப்போ செலவு குறைச்சு, வருமானத்தை கூட்ட வேண்டியது தானே?

1. அரசாங்கத்தோட செலவு, அந்த நாட்டுக்கு பொதுவா செய்யற வசதிகளுக்காக செய்யற செலவு. செலவு குறைச்சா வசதிகள் குறையும். செலவோட பயன் ஒழுங்கா எல்லாருக்கும் போனா போதும். இன்னொரு விஷயம் - அரசாங்கத்தோட செலவு, இன்னொருவனுக்கு வருமானமா இருக்கும்.
2.அரசாங்கத்தோட வருமானம் - வரி. வரிய நம்ம புரிஞ்சிக்க முதல் டைரக்ட் வரி, இன்டைரக்ட் வரின்னு ரெண்டு இருக்குனு புரிஞ்சுக்கணும்.

நேரடியா போய் கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல கட்டினா டைரக்ட் - நேரடி வரி  தானே சார்

நம்ம வருமானத்தில வரி போட்டா டைரக்ட் டேக்ஸ். நம்ம வாங்கற பொருள் மேல போட்டா இன்டைரக்ட் டேக்ஸ், நம்ம செலவுல போடற வரி

சார் நம்ம செலவுல வரியா?

ஆமாம் நம்ம வாங்கற பொருட்கள்ல, பயன்படுத்துற சேவைகள்ல வரி.

எது நல்லது?

வருமான வரி அளவு, நம்ம வருமானத்துக்கு ஏத்தா மாதிரி இருக்கு. நிறைய வருமானம் இருக்கறவங்க நிறைய வரி கட்டுவாங்க. ஆனா இன்டைரக்ட் டேக்ஸ் அப்படி இல்ல. நாம வாங்கற பொருளோட விலைல தான் வரியே தவிர, வாங்கறவன் ஏழையா பணக்காரனானு பாத்து இல்ல. எல்லாருக்கும் ஒரே வரி தான். அதனால வருமான வரி எப்போவுமே நாட்டுக்கு நல்லது.

அப்போ ஏன் சார் அதை போடறாங்க?

ஏன்னா அந்த வரி கலெக்ட் பண்றது சுலபம். வருமான வரி ஒழுங்கா கட்டாதவங்க நிறைய பேர் இருக்கறதுனால தான் இந்த நிலைமை. தவிர அத்தியவாசிய  பொருட்களுக்கு வரி விகிதத்தை அரசாங்கம் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாத்துவாங்க.

அப்போ வளர்ச்சிக்கு என்ன வழி?

ஒரு நாடு வளர, பணமும் (முதலீடு), வேலைசெய்யும் மக்கள் (workforce) முக்கியம். இந்தியால வேலை செய்ய நிறைய பேர் இருக்காங்க. முதலீடு செய்யணும். புதுசா இண்டஸ்ட்ரி வரணும். அப்போ தான் multiplier எபெக்ட் தெரியும்

அது என்ன சார் multiplier ?

இப்போ நம்ம ஊருக்கு 20 கிலோமீட்டர் தள்ளி ஒரு பேக்டரி வருதுனு வெச்சுப்போம். அந்த பேக்டரி  உற்பத்திய கூட்டுறதோடு சேர்ந்து இன்னும் சில பயன் இருக்கு. பேக்டரிக்கு பக்கத்துல முதல்ல ஒரு டீ  கடை வரும், ஒரு பொட்டி கடை, ஒரு பஞ்சர் கடை, ஒரு மெக்கானிக் கடை. கொஞ்ச நாள்ல ஒரு பெட்ரோல் பங்க், ஒரு ஹோட்டல், ஒரு மருந்து கடை. பஸ் ரூட் விடணும், ஷேர் ஆட்டோ போகும். கொஞ்ச நாள்ல பைக்ல போனவன் எல்லாம் முதுகு வலியோட அவஸ்த்தை படுவான். பேக்டரி பக்கத்திலே வீடு வாங்குவான். இப்படி ஒரு முதலீடு, நிறைய வர்த்தக பரிமாற்றங்களா multiply ஆகும்.

இதை தவிர வேற இல்லையா ?

உற்பத்தியை கூட்டறதுக்கு முதலீடு வேணும், அதை வாங்கும் சக்தியும் வேணும். நம்ம நாட்டில உற்பத்தி செஞ்சு இன்னொரு நாட்டில விக்கலாம். அப்போ நம்ம உற்பத்தியை நிறைய பேர்கிட்ட விக்கற வாய்ப்பு  ஏற்படுது. இது வளர்ச்சிக்கு இன்னொரு வழி

சார் இந்த மாதிரி பண்ணா ஸ்லோவா தான் நாடு முன்னேறும். மின்னல் வேகத்தில வளர என்ன பண்றது?

innovation - அதுக்கு புதுமையான கண்டுபிடிப்பு தான் உதவும். ஒரு கண்டுபிடிப்பு இந்த வேகத்தை கொடுக்கும். இன்டர்நெட் - ஒரு யுக்திய வெச்சு உலகம் எப்படி வளந்ததுனு பாக்கறீங்க

சார் இதை தவிர ட்வின் பேலன்ஸ் ஷீட்னு ஏதோ சொல்றாங்களே?

மச்சி, liability சைடு டோட்டலும் அசெட் சைடு டோட்டலும் வேற வேற வந்து நம்ம எக்ஸாம்ல மாட்டலியா? அதே தான், என்ன சார் கரெக்டா?

(முகம் மாறாமல்) இப்போ முதலீடு பத்தி பாத்தோம், முதலீடு செய்ய பணம் எங்கேந்து வரும்? இதுல தனி மூதலீடோட சேந்து வங்கி கடனுக்கும் முக்கிய பங்கு இருக்கு. வங்கி கொடுத்த கடன், உற்பத்தியாளருக்கு ஏதோ ஒரு அஸெட்டா இருக்கு. இப்போ அந்த அஸெட்ல ஏதாவது ஒரு பிரச்னைனா, அது கடன் குடுத்தவனுக்கும் பிரச்னை, கடன் வாங்கினவனுக்கும் பிரச்னை. உங்க accounts ஆசிரியர் ரெண்டு பாலன்ஸ் ஷீட் அஸெட் சைடு காட்டி விளக்குவார்.

அப்போ என்ன பண்றது?

புதுசா கடன் கொடுக்க வேண்டியது தான் ஒரே வழி.

என்ன சார் சொல்றீங்க ? அவன் தான் வாங்கின கடனையே கொடுக்க முடியாம மாட்டிக்கினானே

இது ஒரே ஒரு கடன் வாங்கின உற்பத்தியாளர் பிரச்சனைனா வேற மாதிரி அணுகலாம். ஒரு நாட்டில, இல்ல ஒரு தொழில்ல எல்லாரும் அந்த மாதிரி மாட்டிண்டா, பேங்கிங் ஸிஸ்டெமே ஸ்தம்பிச்சு போய்டும். அந்த பழைய கடன் கணக்க அப்படியே ஓரம் கட்டிட்டு திரும்பி கடன் குடுத்தா தான் economy ஓடும். அப்படினு கெய்னஸ் சொல்றாரு. எனக்கும் அப்படி தான் தோணுது.

அவர் சொல்வதில் நம்பிக்கை இல்லாமல், கெய்ன்ஸ் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன், இன்னும் சில வருஷங்களில் தலை முடி கொட்டி, அலும்னி மீட்டுக்கு வரப்போகும், மாணவர்கள், கல்லூரி மணி அடிக்க, கொஞ்சம் யோசிச்சு கொண்டே வெளியே சென்றனர்! அந்த ஆசிரியர் Lucy படம் பாத்துகொண்டே ரிட்டையர் ஆவார் போல!




ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...