Saturday, 9 July 2016

கடவுளின் அடையாளங்கள்

"குழந்தைகள், கடவுளின் அடையாளங்கள் "

அடையாளம் 1 (நிறைய பணம்): 
ஒன்பது வயது சிறுவன் பாலாஜியின் வீடு - நிறைய பணம் - பார்க்கும் இடமெல்லாம் பணம் -அன்பு செலுத்த அம்மா அப்பா இல்லை -தமிழ் சினிமாவில் வருவது போல - அப்பா -தொழில் மேல் காதல், அம்மாவிற்கு அழகு ஆடம்பரத்தின் மேல் காதல் - இரண்டு பேரும் வீட்டிற்கே எப்பொழுதாவது தான் வருவார்கள் - எப்பொழுதாவது தான் பாலாஜியிடம் பேசுவார்கள் - பள்ளிக்கு செல்ல ஒரு கார், கொண்டு விட்டு கூப்பிட்டு வர ஒரு வேலையாள் - என்ன, தமிழ் சினிமாவில் வருவது போல் - அந்த வேலையாள் அவனிடம் அன்பு செலுத்தி, அப்பாவை போல், அம்மாவை போல், வளர்த்து, background music போட்டு பாட்டு வந்து, அதெல்லாம் இல்லை. வேலையாள், அவனை பார்த்து கொள்வதை "வேலை" ஆக தான் செய்தான். சிறுவனுக்கு என்று ஒரு அறை,அவ்வளவு பெரிய வீட்டில் இடமா இல்லை, கூப்பிடும் தூரத்தில் வேலையாட்கள், சமைக்க ஒரு சிலர், அவனுக்கு பரிமாற ஒரு சிலர், துணிகளை தோய்த்து வைக்க ஒரு சிலர், shoe மாட்டி விட ஒரு ஆள். ஆனால் அவன் தனியாக வளர்ந்தான். ஒரு ஒன்பது வயது சிறுவனுக்கு இந்த தனிமை - பசியினும் கொடியது!

அடையாளம் 2 (கைநிறைய பணம்):
நடுத்தர குடும்பம் - ஒன்பது வயது ஷாலினி - அப்பா -வங்கியில் வேலை செய்பவர் - அம்மா ஷாலினி பிறந்தவுடன் வேலையை விட்டுவிட்டாள், ஷாலினியை பார்த்து கொள்வதற்காக - காதல் கல்யாணம் - காதல், காமம், hormones, தமிழ் சினிமா, கல்லூரி வாழ்க்கை, infatuation எல்லாம் கலந்த இரண்டு வருட அவசர முடிவு - கல்யாணம் முடிந்து ஒரே வருடத்தில் ஷாலினி பிறந்தாள் - அம்மாவிற்கு இருபத்து நான்கு வயது (இப்பொழுது முப்பதுக்கும் மேல்) - வேலையை இழக்கும் படி ஆகி விட்டது. வாழ்க்கையில் ஒரு திடீர் crisis போல் உணர்ந்தாள், பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு, (சில பேர்க்கு) காதல், வேலை, கல்யாணம், குழந்தை என்று படிக்கட்டு அமைத்த சமூக அமைப்பின் சிலந்தி வலையில் விழுந்தது போல் நினைத்தாள். அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தினம் சண்டை, சண்டை என்றால் வாக்கு வாதம் மட்டும் அல்ல, சில சமயம் அடியிலும் முடியும், அதிர்ந்து போய் நிற்கும் ஷாலினிக்கும் அடி விழும். ஷாலினிக்கு பெற்றோர்களை பார்த்தால் சொல்ல முடியாத பயம். பண சண்டை, குடும்ப சண்டை, இரண்டு வீட்டு பெற்றோர்களை பற்றிய புகார் சண்டை, cigarette பிடிப்பதில் ஆரம்பித்து உன்னை கல்யாணம் பன்னிருக்கவே கூடாது என்ற சண்டை. முழுவதுமாக "adult" ஆக வளராத இரண்டு மனிதர்கள் கல்யாணம் என்னும் "intelligent and love based co-existent arrangement" புரிந்து கொள்ளாத, புரியாமல் "விவகாரத்து", என்று பரோட்டா சூரி கோட்டை அழிப்பது போல் முற்படும் முட்டாள்களின் சிற்றின்ப செயலினாலும், மாட்டி கொண்ட எத்தனையோ குழந்தைகள் போல ஷாலினியும் ஒருவள்.

அடையாளம் 3 (சோறு):
சுறுசுறுப்பான திருவான்மியூர் LB ரோடு சிக்னல், சிகப்பு விழ காத்திருக்கும் கண்கள், ஆமாம், சிகப்பு. ரோட்டோரமாய் நிற்கும் இந்த சிறுவர்கள் சிகப்பு விழுந்தவுடன் கார்களில் அமர்ந்திருப்பவர்களிடம் புத்தகம் விற்பார்கள். "யே பாபே" (பாபு) என்று ஒருவன் குரல் கொடுக்க, அந்த சிறுவனுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். என் காரின் கண்ணாடியருகே நின்று "சார் சாப்பிடவே இல்ல சார், வாங்கிகிங்க சார்" என்று சொல்லும் பொழுது அந்த குரல் என்னை ஏதோ செய்தது. உன்னால் முடியும் தம்பியில், ராபிச்சைகாரனின் குரலை கேட்டு, சங்கீதத்தில் கவனம் செலுத்த முடியாத கமல் போல. அவனிடம் ஒரு புத்தகத்தை நான் வாங்கினேன். வாங்கினால் அவனுக்கு உதவுமா? இல்லை அவன் தற்போதைய நிலையையே நீடிக்க விடுமா? அங்கு செல்லும் நூற்றுக்கணக்கான கார்களும், அரசும், அரசியில்வாதிகளும், தன்னார்வ தொண்டுகளும், போலீஸ்காரர்களும், "தன்னுடைய அடையாளம்" என்று சொல்லும் கடவுளும் கூட, அவனின் இன்னலை போக்கவில்லை. எத்தனை குழந்தைகள், எத்தனை சிக்னல்கள் -பச்சைவிளக்கு வந்ததும் காரை ஒட்டி சென்று விட்டு, அன்றாட பிரச்சனைகளில் கரைந்து போனேன்.

"யோவ் தலப்பா, இன்னமோ பாட்டு எழுதிவியாமே, சோறு இல்லானா ஊர கொளுத்தலாம் னு சொன்னியாம், நான் நாஸ்தா துன்னு ரெண்டு நாள் ஆகுது, கொளுத்திடலமா? மீசை மட்டும் இவ்வளவு பெருசா வச்சிருக்க?" என்று பாரதியாரின் மீசையை தட்டி, பாபு கேட்பதை போல் கனவு கண்டு தூக்கத்தில் இருந்து அதிர்ந்து எழுந்தேன்.

Wednesday, 2 March 2016

மிகை

இது ஒரு சிறுவனின் கதை; பொடியன்! அவன் எனக்கு ரொம்ப நெருக்கமான உறவு! கதை என் சிறு வயதில் நடந்தது, late 80s early 90s என்று வைத்து கொள்வோம். கதை அந்த பொடியனுக்கும் அவன் மாமாவிற்கும் இருந்த பிரத்யேக உறவை பற்றி. பொடியனுக்கு பன்னிரண்டு வயது இருந்திருக்கலாம், ஆள் இன்னும் வளரவில்லை - குள்ளம் தான். ஒரு தனியார் பள்ளியில் படித்து கொண்டிருந்தான் - மக்கும் இல்லை, அதி புத்திசாலியும் இல்லை. சொல்வதற்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லாத பொடியன். அவன் மாமா ஏதோ ஒரு தனியார் கம்பெனியில் சுமார் வேலை. ஐந்தடி இருப்பார், பெரிய கண்ணாடி, ஒரு மாதிரி குடமிளகா மூக்கு - அவர் அம்மா போல என்று நினைக்கிறேன். உடல் அமைப்பு அந்த பொடியனை போல தான் - சொல்வதற்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லை (blog எழுதுபவர்களுக்கு வர்ணிப்பது கஷ்டம் தான்).மாமாவிற்கு அந்த பொடியன் மேல் மிகுந்த பாசம். மிகுந்த என்றவுடன் ஞாபகம் வந்தது - தலைப்பை படித்திருப்பீர்கள். மாமாவிற்கு ஒரு குணாதிசயம் உண்டு. அவர் எல்லாவற்றையும் மிகைப் படித்தியே பேசுவார், பொய் சொல்ல மாட்டார். மே மாதம் வெய்யில் அதிகமாக இருக்கும் பொழுது - மவுண்ட் ரோடே வெயில்ல பத்திண்டு எரியறது என்பார், ஆஸ்திரேலியா இந்தியாவை கிரிக்கெட்டில் ஜெயித்தால், slater அடித்த பந்து டிவி பார்த்து கொண்டவா மேல வந்து விழுந்தது என்பார், தாம்பரம் தாண்டி plot வாங்க போன போது, அந்த புரோக்கர் கிட்ட "ஏம்பா இன்னும் போனா jaffna வந்திடும் போல" என்பார். திருப்பதில கூட்டமே இல்லை, பாலாஜியே வாசலில் நின்னு டிக்கெட் குடுக்கறார் என்பார். லேசான நகைச்சுவை இருக்கும், புத்திசாலித்தனம் என்று தானாகவே நினைத்து கொண்டு பேசுகிற வழக்கம். பேசுவது என்றால் பிடிக்கும், யாரிடம் வேண்டும் என்றாலும் பேசுவார், எதை பற்றி வேண்டுமானாலும் பேசுவார், புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வதில் அலாதி பிரியம். google இல்லாத காலம், எல்லாம் புத்தகமும், தொலைக்காட்சியும் தான் பாடம் சொல்லி தரும். சத்தமாக தான் பேசுவார், கொஞ்சம் பாட்டும் பாடுவார். ritchie தெருவிலும், பர்மா பஜாரிலும் கிடைக்கும் அனைத்து electronic சமாச்சாரங்களையும் வாங்கி குவிப்பார், சில சமயம் அதையெல்லாம் பிரித்து ஏதோ ரிப்பேர் செய்வார். அவர் பேச்சிலும், நடவடிக்கையிலும் ஒரு வேகம் இருக்கும். பரபரப்பு!

பொடியன் - அவரின் தங்கையின் மகன். திடீரென்று ஏன் அவர் அந்த பொடியனின் வாழ்க்கையில் புகுந்தார் என்று தெரியவில்லை. (என் எல்லா bloகிலும் இந்த intelligent design பற்றி எழுதுவேன்). ஆனால் பொடியன் பன்னிரண்டு பதிமூன்று வயதில் தான் அவருடன் பழக ஆரம்பித்தான். ஞாயிற்று கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பொடியன் வீட்டிற்கு வருவார். பொடியன் எப்பொழுதும் விளையாடி கொண்டிருப்பான். cricket விளையாடும் பொழுது ஒரு முறை வந்தார் - பொடியன் ரொம்ப சுமாராக விளையாடுவான். அவர் தங்கையிடம் 'உன் பிள்ளை tendulkar, kapil dev மாதிரி விளையாடறான்' என்றார் (தலைப்பை படியுங்கள்). அது வரைக்கும் அந்த பொடியனை யாரும் பாராட்டியதே இல்லை. அவனுக்கு அது புதுசாக இருந்தது. வரும் வாரங்களில் பொடியன் மாமாவிடம் பாராட்டு வாங்க முயற்சிக்க ஆரம்பித்தான். cricket பற்றி பேச ஆரம்பித்தான். அந்த கால கட்டத்தில் cricket தவிர சிறுவர்களுக்கு ஒன்றும் தெரியாது. one day cricket பிரபலமாக கொண்டிருந்த காலம், கேபிள் டிவியும் அப்பொழுது தான் தொடக்கம். சிறுவர்களுக்கு படிப்பை விட கிரிக்கெட்டே நன்றாக தெரியும். பொடியனுக்கு தெரிந்தவைகளை மாமாவிடம் சொல்ல ஆரம்பித்தான். அவர் ஆச்சரிய பட ஆரம்பித்தார் - அட இவ்வளவு தெரியுமா உனக்கு  என்றார் (தலைப்பை படியுங்கள்). பொடியன் அவன் திறமைகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது போல உணர்ந்தான்.மெல்ல மெல்ல, carrom board, chess, tennis என்று பேச ஆரம்பித்தார்கள், கொஞ்சம் விளையாடினார்கள். அதிலெல்லாம் மாமாவை சுலபமாக வீழ்த்தினான். பொடியனுக்கு இமாலய வெற்றி போல இருந்தது, மாமாவோ இவனை போல ஒரு பையனை பார்த்ததில்லை என்றார் (தலைப்பை படியுங்கள்).கொஞ்சம் கொஞ்சமாக வேற விஷயங்களை பற்றி பேச ஆரம்பித்தார்கள் - அரசியல், சினிமா, பிற நாடுகளை பற்றி - சம்பந்தமே இல்லாத விஷயங்களை பற்றி. பொடியன் அவரிடம் பேச வேண்டும் என்று நிறைய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தான். தன்னை புத்திசாலி என்று நினைப்பவிரிடம் நல்ல பெயர் நிலைத்து நிற்க நிறைய முயற்சிகள் செய்தான்.

இந்த இடத்தில - ஒரு pause button! பொடியன் என்ன நினைத்தாலும், மாமாவோ அவர் சுபாவத்திற்கு ஏற்ற மாதிரியே, அனைவரிடம் பழகுவதை போல, அனைவரிடம் மிகை படுத்தவதை போல தான், இவனிடமும் பேசினார். தன் சகோதரி மேல் இருந்த அன்பினால் கொஞ்சம் பாசம் அதிகம் என்று சொல்லலாம். இவன் வயதில் இருக்கும் இன்னும் சில உறவினர்களின் பிள்ளைகளையும், தன் பிள்ளைகைளையும் கூட அப்படி தான் பேசினார்; பழகினார். மற்றவர்கள் அறிவுக்கு அது ஏன் புலப்படவில்லை என்று தெரியாது. இந்த பொடியன் தான் 'motivate' ஆனான். மற்றவர்கள் அவரிடம் இவ்வளவு நெருக்கமாக பழகவுமில்லை. சிலர் அவரின் குறைகளை பற்றி கூட பேசி இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு பொடியனை விட முதிர்ச்சி அதிகமாக இருக்கலாம். பொடியனுக்கு அவர் மிகை படுத்துகிறார் என்று தெரியாத அப்பாவித்தனம் இருந்திருக்கலாம். பொடியனிடம் ஒரு reciprocation இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். Godsend! மாமா இந்த bloகை படிக்க நேர்ந்தால், இதெல்லாம் நான் செய்தேனா, என்னுடைய தாக்கம் இவ்வளவு இருந்ததா என்று கூட நினைக்கலாம். நாம் பேசுவதும், செய்வதும் மற்றவர்களிடம் எப்படி சென்றடையும் என்று நாம் புரிந்து கொள்வதில்லை.

பொடியனுக்கும் மாமாவிற்கும் உறவு வளர்ந்து கொண்டே வந்தது. மாமாவின் மிகை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்தான். ஆனால் அவரிடம் அங்கீகாரம் பெறுவதற்காக தொடங்கிய  அந்த அறிவு தேடலின் சுகத்திலிருந்து அவன் மீளவே இல்லை. ஒருவன் தன்னுடைய அறியாமையை தெரிந்து கொள்ளும் பொழுதே புத்திசாலி ஆகிறான். இரண்டும் கெட்டான் பருவமான பதினைந்து பதினாறு வயதுகளில் ஏற்படும் சில மாற்றங்களை பற்றி அவனுக்கு நாசூக்காக சொல்லி கொடுத்தார். சுஜாதாவின் "நிலா நிழல்" புத்தகத்தை கொடுத்து "cricket பற்றிய புத்தகம் - படி" என்றார். என்னை கேட்டால், பள்ளிகளில் அந்த கதையை non-detail பகுதியில் சேர்த்து விட வேண்டும். புத்தகம் எழுதிய சுஜாதாவிற்கும், புத்தகத்தை கொடுத்த மாமாவிற்கும் அவன் எப்படி நன்றி சொல்ல போகிறான். ஒரு யுகம் வேண்டும்! ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தை கொடுத்தார் - பாலுணர்வு சம்பந்தமான கேள்விகளும் குழப்பங்களும் நிறைந்த வயதில் இருந்த பொடியனுக்கு எவ்வளவு தெளிவு தேவை பட்டது. deft ஆக பொடியனை handle செய்தார். முதல் முறை வண்டி ஒட்டி பழக, அவருடைய வண்டியை கொடுத்தார், எதிர் வீட்டு ஜன்னல் பக்கத்தில் மோதி நிறுத்தினான் பொடியன். அவர் ஒன்றுமே சொல்லாமல், உனக்கு எதுவும் அடிபடலியே என்று கேட்டார்.

இவ்வாறிருக்க, அந்த பொடியனின் குடும்பத்தில் ஒரு பணச்சிக்கல் ஏற்பட்டது. ஒரு middle class பிராமண குடும்பம். கதையின் tragedy track ஐ சென்சார் செய்து விடுவோம். பொடியனின் படிப்பு நின்று போகி விடுமோ என்ற கவலையில் இருந்த பொழுது, மாமா அவர் தங்கையிடம் "நீ எதுக்கும் பயப்படாதே, நான் இருக்கிறேன், ஒரு லட்சம் ரூபாய் இப்பொழுதே உன் பேங்க் அக்கௌண்டில் கட்டி விடுகிறேன் (ஒரு லட்சம் அப்பொழுது பெரிய தொகை). நீ அதை பத்து வருடமோ, பதினைந்து வருடமோ கழித்து திருப்பி கொடு. எனக்கு இவன் மேல் நிறைய நம்பிக்கை இருக்கிறது. அவன் வாழ்வில் பெரிய ஆளாக வருவான்" என்றார்.  பொடியன் மேல் நம்பிக்கை வைத்த இரண்டாம் நபர் அவன் மாமா. அவனுக்கு அந்த நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக இருந்தது. பொடியனுக்கு ஒரு மனோதைரியம் வந்தது. பாலாஜி சக்திவேல்போன்ற திறமையான இயக்குனர்கள் இருந்தால் கெய்ன்ஸ் எழுதிய பொருளாதார தத்துவத்தையும், quantitative easing என்ற வழி முறையையும் சேர்த்து backgrounடில் காண்பித்திருப்பார்கள்.

பொடியன் உயரமாக  வளர்ந்தான், திறமைகளை வளர்த்து கொண்டே வந்தான். அவர்கள் மாமாவிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல், உழைத்து, அவனை படிக்க வைத்தார்கள் - டாக்டர் ஆகவோ, engineer ஆகவோ, chartered accountant ஆகவோ ஆனான். பொடியனின் மனதில் நிரந்தரமான அறிவுத்தேடலை புகுத்தி, அவனை பாராட்டி, நம்பிக்கையூட்டி, அவன் திறமைகளை வளர்த்து கொள்ள ஒரு உந்துதலாக இருந்து, ஒரு midlife crisis பற்றி கவலை படாமல் செய்து, பருவ வயதில் அவனை வழிநடத்தி, அந்த பொடியனை ஓங்கி உயர வைத்த அந்த மாமாவை கடவுளின் மனித ரூபமே என்று சொன்னால், தலைப்புக்கு முரணாக, மிகையாகாது என்று நினைக்கிறேன்! 


Dedicated to all the loving souls in our family who spend their lifetime sacrificing personal ambitions to upbring children!


ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...