Saturday, 11 October 2014

கண்ணாடி

கண்ணாடி

உலகத்தில எவனுமே நல்லவன் இல்ல!

நாம் அனைவரும் "சரி - தவறு" என்னும் ஏதேனும் ஒன்றில் அடங்குவோமா என்றால் இல்லை; சில சமயம் சரியாகவும், சில சமயம் தவறாகவும் இருக்கும் முரண் நாம் - என்று ஒருவர் கோவிலில் தத்துவம் பேசி கொண்டிருந்தார். அங்கே இருந்தவர்களில் ஒருவர் கூட அவர் பேசுவதில் கவனம் செலுத்தவே இல்லை. கதாகாலட்சேபம் முடிந்தவுடன் கிடைக்கும் பொங்கலே குறியாய் அமர்ந்திருந்தனர். அவர் சொன்னதை கேட்ட சிலருள் நானும் ஒருவன். என்ன தத்துவம் அது? என்று யோசிக்க ஆரம்பித்தேன். நல்லவன் என்றால் எல்லோரிடதிலும், எப்பொழுதும் நல்லவனாய் இருக்க வேண்டுமா? அப்படி ஒருவனால் இருக்க முடியுமா? அந்நியன் படத்தில் சொல்வது போல் தப்பை - small, large, extra large என்று பிரிக்க முடியுமா? 

பொய் சொல்வது தவறா என்றால்- ஆம். ஆனால் பொய் சொல்லாதவன் எவன்? அலுவலகத்தில் இல்லாத பொய்யா? "உன்னை போல ஒருவன் வேலை செய்ய முடியாது, உனக்கு இந்த வருடம் கண்டிப்பாக பதவி உயர்வு (promotion)" என்று பொய் சொல்லும் மேலாளன், "நான் கண்டிப்பாக திங்கள் கிழமைக்குள் பணியை முடித்து விடுவேன்" என்று பொய் சொல்லும் ஊழியன், "வீட்டிற்கு இன்றே அனுப்பி (delivery) செய்வோம்" என்று பொய் சொல்லும் வியாபாரி, "bus late" என்று பொய் சொல்லும் மாணவன், குடிக்கவே இல்லை என்று பொய் சொல்லும் கணவன், லஞ்சம் வாங்கும் அதிகாரி - இவர்கள் எல்லாம் நல்லவர்களா? ஆனால் இந்த listஇல் சின்ன தவறு - பெரிய தவறு எது என்று நம் மனது ஏற்கனவே பிரித்து விட்டது, அல்லவா?

அலுவலகங்களில் "team building" என்ற பெயரில் வெள்ளிக்கிழமை மேலாளன் அவன் கீழ் வேலை செய்பவர்களை கூப்பிட்டு கொண்டு ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் சாராயம் குடிப்பான். அதற்கு அந்த கம்பெனி பணம் செலுத்த வேண்டும். இது பரவாயில்லை என்றால், புதிய பொருள் அறிமுகம் செய்ய (product launch), அந்த அலுவலகமே ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் வெளிநாட்டு சாராயம் (சீமை சரக்கு) வாங்கி கொடுப்பார்கள். அதற்காக கூட்டம் கூட்டமாக வந்து கை தட்டி, ஆங்கிலம் பேசி, coat அணிந்து வந்து சேர்வார்கள். அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு peon டாஸ்மாக் கடையில் குடித்து ரோட்டில் நடந்து சென்றான் என்று கேள்வி பட்டால் அவனை வேலையில் இருந்து நீக்கி விடுவார்கள்.


பொய், பித்தலாட்டம், பாசாங்கு இதெல்லாம் தெரியாவிட்டால் வியாபாரம் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். அனைத்து இடங்களிலும் பொய். பணம் என்பதை துரத்தி ஓடுவதில் சரி - தவறு என்பதெல்லாம் யோசிக்கவே நேரம் இல்லை. அதற்குள் இன்னொருவன் முன்னே ஓடி விடுவானே. என்னை விட நிறைய சம்பளம், என்னை விட பெரிய வீடு, கார் வாங்கிவிட்டானே என்று பொறாமையில் ஓட்டம்.

அரசியல் என்றாலே அது கெட்ட வார்த்தையாய் ஆகி விட்டது. அவர் அரசியல்வாதி என்று சொன்னால், உடனே மனதிற்குள் ஒரு விதமான தப்பு அர்த்தம் செய்து கொண்டு விடுகிறோம். நாட்டின் தலை எழுத்தை மாற்றி விடுவோம் என்று மேடை பேச்சை கேட்டு கேட்டு, ink தீர்ந்து போனது தான் அறுபது வருட சுதந்திரம்.

அனைத்து இடங்களிலும் லஞ்சம் - குழந்தை பிறந்தவுடன் பதிவு செய்வதிலிருந்து, பள்ளிகளில் இடம் கிடைக்க (donation) என்ற பெயரில் லஞ்சம், தேர்வில் வெற்றி பெற லஞ்சம், அரசு உத்தியோகம் கிடைக்க லஞ்சம், திருமணம் பதிவு செய்ய லஞ்சம், ஓட்டுனர் உரிமம் பெற லஞ்சம், நிலம் வாங்கி விற்று பதிவு செய்ய லஞ்சம், வியாபார உரிமம் பெற லஞ்சம், கடைசியில் பிரேத கிடங்கில் பிணத்தை பெற லஞ்சம் - எங்கும் லஞ்சம் - எதிலும் லஞ்சம். இதில் லஞ்சம் வாங்குபவர்களை விட கொடுப்பவர்களே அதிகம். அவர்கள் செய்யும் தவறுகளுக்காக தான் கொடுக்கிறார்கள், பாசாங்கு மனிதர்கள். இவ்வளவும் செய்யும் மக்கள் அரசியல்வாதிகளின் ஊழல் தொலைகாட்சியில் வந்தால் திட்டுவார்கள். மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி!

இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்...............

இந்த தலைப்பில் நான் எழுதி கொண்டிருப்பதை, என் நண்பன் ஆத்மாவிடம் காண்பித்தேன். அவன் "சார் இந்த மாதிரி நிறைய படித்ததும் பார்த்ததும் உண்டு. கடவுள் பாதி - மிருகம் பாதி தத்துவம் தானே. நாம் உலகத்தை பார்க்கும் விதத்தில் தான் உலகம் நமக்கு தெரியும். அதில் கெட்டதும் இருக்கிறது, நல்லதும் இருக்கிறது. ஒரு செய்திதாள் போல. நாம் கெட்ட செய்திகளை மட்டும் படித்தால், depressing ஆக தான் இருக்கும். நல்ல செய்திகளை தேட வேண்டிருக்கிறது. இருந்தாலும் நல்ல செய்திகளும் இருக்கின்றன. தொலைகாட்சியில் நல்ல நிகழ்சிகளும் வருகிறது. ஏனோ நாம் தான் அதை பார்ப்பதில்லையோ என்று நினைக்கிறேன். உலகம் ஒரு கண்ணாடி போல நம்மை போன்று தான் இருக்கிறது.  "உலகத்தில எவனுமே கெட்டவன் இல்ல!" என்று பாசிட்டிவா எழுதினா நல்லா இருக்குமே" என்றான். எனக்கு "வேதம் புதிது" படத்தில் சத்யராஜ் கன்னத்தில் அறை வாங்குவது போல் இருந்தது. கோபத்துடனும் வெட்கத்துடனும் Ctrl + shift + Home, Delete பண்ணுவதற்கு முன்னால், பிரசுரியது bloகியது!

ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...