Facebook status, blog போன்ற இடங்களில் தமிழில் எழுதுவது “கெத்து” ஆகிவிட்டது. நானும் கொஞ்சம் காலரை தூக்கி
கொள்வோமே என்று இந்த முயற்சி.
ஞாயிற்றுக்கிழமை காலை
10 மணியளவில் சோம்பேறித்தனமாக சுற்றி கொண்டிருந்தேன். “அங்கே” போக வேண்டும் என்று போகவில்லை, அந்த பக்கமாக போனதால்
பார்த்தேன். பார்த்தால் “அங்கே” இருபது பேர் காத்திருந்தார்கள். மனைவிக்கு போன்
போட்டேன் “இப்போவே நிற்க ஆரம்பித்து, இருபது பேர் இருக்கார்கள். நீ அம்மாவை வர
சொல்” – போனில் ஒரு பரபரப்பு. நான் பேசி முடிப்பதற்குள் குடுமி கடுக்கன்
போட்ட ஒருவர் மல்லிகா ஷேரவாத் படம் போட்ட 40 பக்கம் notebook ஒன்றை நீட்டினார். அவரை ஒரு பத்து பேர் சூழ,
என்ன என்று கேட்டு தெரிந்து கொள்வதற்குள், ஆட்டோக்களும் கார்களும் வந்து கொண்டே
இருந்தது. அனைவரும் பேரும் போன் நம்பரும் – சீரியல் நம்பர் போட்டு எழுதினோம். அவர்
அதை “சமூக சேவை” என்றே கூறினார். என் மனைவி அம்மாவை அழைத்து
வந்தாள். “அதற்குள்ளேவா?” என்று அவள் கேட்பதற்கு வாய்ப்பே இல்லாமல்
கூட்டம் அலை மோதியது. குடுமி மாமாவுடன் இன்னும் இரண்டு மூன்று “volunteers”
சேர்ந்து இருந்தார்கள். அம்மா – நீ இப்போ நின்று
கொண்டு இரு, நான் replacement ஏற்பாடு செய்து
விட்டு வருகிறேன் என்று நானும் என் மனைவியும் சென்றோம்.
சில உரையாடல்கள்:
மதியம் – அம்மா, மாலை
– அப்பா, வேண்டாம் – நானே மாலை போகிறேன். நீ இரவு ஒரு இரண்டு மணி நேரம் மட்டும் அப்பாவை
வர சொல். நான் தம்பியுடன் பேசுகிறேன். அவன் கொஞ்ச நேரம் இருந்தால் நன்றாக
இருக்கும்.
தம்பி – எங்கேடா
இருக்க? இன்றிரவு ஒரு nightout பண்ண முடியுமா? அவன் யோசித்து பார்த்து OK என்று சொன்னான். அதிகாலை English premier league எங்கள் துணை இருந்தது. ஆனால் மூன்று மணிக்கு relieve பண்ணி விட வேண்டும்
என்றான். Manchester united கண்டிப்பாக வெற்றி பெரும் என்று அவன் தலையில் ice வைத்து போனை துண்டித்தேன்.
மீண்டும் “அங்கே” வந்தால், ஒரு பெரிய லைன் இருந்தது. அம்மாவிடம் இருந்து
நான் “baton” வாங்கி கொண்டு நிற்க தொடங்கினேன். எனக்கு சிறு
வயதிலிருந்தே பார்ப்பவர்களுக்கு புனைபெயர் வைத்து கேலி செய்யும் பழக்கம் உண்டு.
இவ்வளவு சுவாரசியமான மனிதர்கள் என்றால் சும்மாவா. எனக்கு முன் நிற்பவர் பழகுவதற்கு
எளிமையாக இருந்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிபவர். அவர்
நிறுவனத்தில் ஆரம்பித்து திருப்பதி நடைபாதையில் உள்ள ஒரு பள்ளதாக்கு, தோனியும்
கங்குலியும், ராபர்ட் மெய்னர்ட் கெய்ன்ஸ் எழுதிய பொருளாதார கொள்கைகள், ராஜஸ்தானி டாபாவின்
சப்பாத்தி என்று பல கருத்து பரிமாற்றங்கள். இடையில் பல இடைஞ்சல்கள். எங்களுக்கு
மூன்று நான்கு token (40 பக்க மல்லிகா ஷேரவாத் ஞாபகம் இருக்குமே) ஒரு “AK 47” (ஆர்வ கோளாறு). அப்படி ஒரு படுமையனை (pessimist) நான் பார்த்ததே இல்லை. தெனாலி கமல் போல
எதற்கும் பயம். சார் – இப்போதே ஒரு பெரிய அடிதடி நடந்தால் என்ன செய்வது? போலீசிடம்
சொல்லி விடலாமா? கூட்டம் அதிகமாகிவிட்டதே? முன்னூறு பேர் தாண்டி விட்டதே? சண்டை
கண்டிப்பாக வரும் என்று அவ்வபோது எங்கள் உரையாடலை கெடுப்பான். இருந்தாலும்
சிரிப்பு தான் வந்தது. நாங்கள் சளைக்கவில்லை. காப்பி - டீ (சைக்கிளில்)
வியாபாரிகள் வந்தனர். அவர்களுக்கு எப்படி மூக்கில் வேர்க்கும் என்று MBA பயிலும் மாணவர்கள் கண்டு பிடிக்க வேண்டும் (அந்த
வேலைக்கு அவர்கள் தான் சரி :) ).
Fridge இல் வைத்த ஆப்பிள் பழம் போல் சில பேர் வாழ்பார்கள். பெரும்பாலும்
பணக்காரர்களாக இருப்பார்கள். பள்ளியில் இருந்தே எல்லா பாடங்களுக்கும் tuition செல்வார்கள், இருந்தும் 70% தாண்ட மாட்டார்கள். தினம் அம்மா டிரைவருடன்
பள்ளிக்கு கொண்டு வந்து விடுவாள். வெயில் தாங்க மாட்டார்கள்; பள்ளி கழிவறையில்
நாற்றம் தாங்க மாட்டார்கள்; சண்டை போட மாட்டார்கள்; பள்ளிக்கு வெளியே மாங்காய்
வாங்க மாட்டார்கள்; குழாயில் தண்ணீர் குடிக்க மாட்டார்கள், அவர்களின் வாழ்க்கையில் ஒரு சோகம் இருக்காது, கோபம்
இருக்காது, வீழ்ச்சி இருக்காது. 21 G பஸ் எங்கிருந்து எங்கே போகும் என்று அவர்களுக்கு தெரியாது, சைக்கிளில் கழண்டு
போன செயினை மாட்ட சத்தியமாக தெரியாது, ஜுரம் கூட வராது என்று தான் நினைக்கிறேன். சில
நேரங்களில் கடவுளிடம் இவர்களுக்கு “Second innings” கொடு என்று வேண்டியது உண்டு. இப்படி பட்ட ஒரு ஆப்பிள் எங்களிடம் வந்தான். “நீங்கள்
எல்லாரிடம் கேட்டு முடிவு செய்து தான் இங்கே நிற்கிறீர்களா?” என்றான். என்ன கேட்க வேண்டும் என்றேன். “ஒரு
பெரிய பட்டியலிட்டு, அதற்கு சில முக்கியமான விபரங்களை சேகரித்து, கேள்விகளை
தயாரித்து, அதில் எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்று” சர்வே செய்வதை பற்றி ஆரம்பித்தான். இது அப்படி
எடுக்க வேண்டிய முடிவு அல்ல. அதற்குள் ஒரு Gym Body குறுக்கே வந்து எங்களை காப்பாற்றினான். Attendance எடுக்க ஆரம்பித்தார்கள். Token வரிசை படி பெயர் போன் நம்பர் ஒவ்வருவரும் சொல்ல, அவர்கள் சரி பார்த்து கொண்டே
சென்றனர். அது முடிந்த பின் டீ குடிக்க சென்றவர்கள் அவர்கள் இடத்திற்கு வர, “இப்பொழுது
தான் வருகிறார்கள்” என்று சிலர் கூச்சலிட, நம்ம AK கை நடுங்கி கொண்டே
எங்கள் அருகில் வந்தான். எனக்கு சில ரவுடிகள் தெரியும் என்றான். நாங்கள் சிரிப்பை
அடக்க முடியாமல் தவித்தோம்.
இரவு எட்டு மணி முதல் பத்து மணி வரை அப்பா “duty” பார்த்தார். தம்பி MP3 player உடன் வந்து அப்பாவை வழி அனுப்பினான்.
கொசுவர்த்திகளும், odomos உம், தெருவில் இருந்த குப்பைகளை கொளுத்தியும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
கொசுக்கள் தான் ஜெயித்தது. நான் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு வந்தேன்.
பெப்ரவரி மாதம் என்றாலும் கொஞ்சம் கூட குளிரே இல்லை. இதற்கு இடையில் AK, Gym Body, apple, குடுமி மாமா மற்றும் சில பேரும் கொஞ்சம்
பதற்றமாக பேசி கொண்டிருந்தனர். AK தான் பதற்றத்திற்கு காரணம். “ஒரு நூறு இருநூறு
பேர் திடீர்னு வந்து இந்த token எல்லாம் செல்லாது என்றால் என்ன செய்வது? அவங்கள் ஒரு நோட்டு புத்தகம் எடுத்து
நம்பர் போட்டார்கள் என்றால் என்ன செய்வது?” என்று குழப்பினார். எல்லோரும் சேர்ந்து,
இன்னொரு முறை Attendance எடுப்பது என்று முடிவு செய்தார்கள். இது மூன்றாவது முறை. முடிந்தவுடன் சண்டை
வந்தது. கூட்டம், கூச்சல், குழப்பம், சமாதனம். விடிந்தது.
காலையில் “அங்கே” பெரிய கேட்டை திறந்து உள்ளே ஒரு மைதானத்தில்
உட்கார வைத்தார்கள். அப்பா காலையில் Flaskகில் காப்பி எடுத்து கொண்டு வந்தார். Token நம்பர் 850 ஐ தாண்டி விட்டதாமே என்றார். சிலர் “அங்கே” நிற்கும் வேலையை outsource செய்திருந்தார்கள். காலையில் குளித்து முடித்து
தெம்பாக வந்து சேர்ந்து கொண்டார்கள்.
ஆரம்பித்தது; ஒருவர்க்கு பத்து நொடிகளுக்கு மேல் ஆகவில்லை.
பெயர், அப்பா பெயர் மட்டும் தான் கேட்டார்கள். பெயர் சொல்லி, அப்பா பெயர் சொல்லி
வாங்கினேன் என் மூன்று வயது மகனுக்கு LKG யில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை! மிகவும் சந்தோஷமாக வாங்கினேன்!
பின்குறிப்பு (முன்குறிப்பும் கூட)
இதை படிப்பவர்களுக்கு
சுஜாதாவின் ஞாபகம் வந்தால்– சுஜாதா என்னும் பெருங்கடற்கரையில் இருக்கும் பல கோடி மணலுள்
ஒரு துகள் நான்!