Monday, 29 December 2025

ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most extraordinary story to tell you. Its your story too, in fact its ours" என்று சொல்வதை போல, இந்த பதிவு எனது கதை மட்டுமல்ல, நமது கதை. (ஹே ராம் படத்தை பற்றி எழுத, ஐந்து blog பதிவாவது தேவைப்படும். சமீபத்தில் இயக்குனர் மணிகண்டன் அவர்களின் நேர்காணல் பாருங்கள்). ஒத்த கருத்துக்கள் உடையவர்களுடன் சேர்ந்து உரையாடுவதே சுவர்க்கம் (சொர்க்கம்) என்ற நாலடியார் பாடலை நினைவில் கொண்டு, ரயிலை கண்ட உடனே palpable மகிழ்ச்சி கொள்ளும்  என்னை போல், உங்களை போல் இருக்கும் ரயில் காதலர்களை பற்றியதே இந்த முயற்சி (இதை படிக்கும் சிலர் அங்கே குமிழ் சிரிப்பது எனக்கு தெரிகிறதே?! quantum empathy போலும் 😊). 

என்னுடைய ரயில் பயணம் மீட்டர் guage வண்டிகளில் - மரப்பலகை கொண்ட இருக்கைகள் இருந்ததே அப்பொழுது தொடங்கியது. எளிதாக சொன்னால், சைடு லோயர் மற்றும் சைடு அப்பர் பெர்த் கிடையாது, கொஞ்சம் குறுகிய ரயில்கள். என் நினைவில் முதன் முதலில் சென்ற ரயில் சென்னை திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்! குருதிப்புனல் முன் பகுதியில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு சண்டை காட்சியின் போது ஒரு ராட்சஷ கடிகாரம் தொங்குமே, நினைவிருக்கிறதா? அதில் இரவு 9.15 மணிக்கு கிளம்பியது மலைக்கோட்டை ரயில்.  

எனக்கு சிறு வயதிலிருந்தே ரயில்களை பற்றி தெரிந்து கொள்ள ஆசை. அப்பா மார்க்கெட்டிங் வேலையில் இருந்ததால், அவருக்கு ரயில் டிக்கெட் வாங்கும் பணி எனக்கு. முதலில் பீச் ரயில் நிலையத்தில் வாங்கிய மெல்லிய ஞாபகம். பின்னர் எங்கள் பகுதியில் உள்ள திருமயிலை ரயில் நிலையத்தில் ஒரு முன்பதிவு அலுவலகத்தை திறந்து விட, மாதம் இரண்டு மூன்று முறை சைக்கிள் எடுத்து கொண்டு போவேன். அங்கே முன்பதிவு படிவத்தை நிரப்பி வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டும். அவ்விடம் பரிமாண வளர்ச்சி அடைந்து, அங்கே இருக்கைகள் போட பட்டது. அமர்ந்த படி, அருகிலிருப்பவர்களுடன் பேசி கொள்ளலாம். அங்கே பேனா இல்லாமல் வருவார்கள், படிவத்தை சரியாக நிரப்ப மாட்டார்கள், சில்லரை இருக்காது. ஒரு ரயில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்லும் போது ஒரு ரயில் நம்பரும், திரும்பி வரும் போது வேறொரு நம்பரும் கொண்டிருக்கும். அதை மாற்றி எழுதி ரயில்வே ஊழியரிடம் தர்க்கம் செய்வார்கள். ஒரு ரயில் டிக்கெட் வாங்கி கொண்டு வர, இரண்டு மணிநேரமும் நிறைய சம்பவங்களுமும் ஆகும். 

ரயில்வேத்துறை பட்ஜெட்டிற்கு பிறகு, அந்த ஆண்டிற்க்கான ரயில் அட்டவணையை ஒரு புத்தகமாக வெளியிடும், அதை படித்து புரிந்து கொள்வதே ஒரு இனிமையான சவாலாக இருக்கும். நிறைய குறியீடுகளும், சுருக்கெழுத்துக்களும் கொண்ட அந்த அட்டவணை என் அப்பா தவறாமல் வாங்குவார். (புது புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் பழக்கம் உங்களுக்கு உண்டா?)  என்னுடைய ஆர்வம் ரயில்வே அட்டவணை புத்தகத்தை பார்ப்பதில் மட்டுமல்ல, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலையும், தூத்துக்குடியில் இருந்து வரும் ரயிலையும் coupling செய்வதை நின்று பார்ப்பதிலும் இருந்தது. லோகோ pilots ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பிரம்பினால் ஆன ஒரு வளையத்தை தூக்கி எறிவார்கள். அது ஒற்றை தடத்தின் Token exchange system பற்றியது என்று தெரிந்து கொண்டேன். பாம்பன் பாலத்திற்கு முன் பொறுத்த பட்டுள்ள three-cup anemometer எனும் கருவி, காற்றின் வேகத்தை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கும். மேலும் அந்த கருவி அங்குள்ள ரயில்வே சிக்னலுடன் இணைக்க பட்டுள்ளது. காற்று அபாயகரமான வேகத்தை பெற்றால், ரயில்வே சிக்னல் சிகப்பாக மாறும். இதே போல் ஜப்பானில் Fujino – ushijima என்னும் ஒரு இடத்திலும் இருப்பதை தெரிந்து கொண்டு, "Connect pamban and Fujino – ushijima" என்று CA instituteல் நடந்த ஒரு விநாடி-வினாவில் கேள்வியாக வைத்தேன். 

கொஞ்சம் தற்பெருமையை தள்ளி வைத்து, நான் எழுத வந்ததை பற்றி காண்போம். என் பயணமானது, சிறுவயதில் - முன்பதிவில்லாத ரயில்களில் பயணம் செய்வதில் தொடங்கி, இப்பொழுது எல்லாம் "third AC" வேண்டாம் -  "second AC" தான் வேண்டும் என்ற பொருளாதார நிலைக்கேற்ப வந்திருக்கிறது. Dr.மன்மோகன் சிங் அவர்களுக்கு கோவில் கட்ட வேண்டும்.  சிலருக்கு பகல் ரயில்கள் பிடிக்கும், சிலருக்கு இரவில் செல்லும் ரயில்கள் தான் பிடிக்கும். எனக்கு இரண்டுமே பிடிக்கும். பிடிக்கும் என்றால், அலாதி பிரியம். பகல் வேளையில் ஜன்னல் சீட் கிடைத்தால் போதும், இரண்டு -மூன்று காபி, பேசி கொண்டு வர ஒரு நண்பன், போதுமெனக்கு. ஒவ்வொரு நீர் நிலைகளையும் பார்ப்பேன், ப்ளூ ஜே மற்றும் மீன்கொத்தி (Kingfisher) வகை பறவைகளை ரசிப்பேன், அதன் நீலமே எனக்கு பிடிக்கும். திருநெல்வேலி செல்லும் போது, ரயில் விருதுநகரை தாண்டியவுடன், செம்மர நிறத்தில் மண்பூமியில் மயில்களை பார்ப்பது ஒரு சுகம்.  பிரிட்டிஷ் இந்தியாவின் சில சுவடுகள் ரயில் நிலையங்களில் காணலாம். பெரும்பாலான ரயில் நிலையங்களில் ஆல மரம், அரச மரம் இருக்கும். அதை பார்ப்பதே அவ்வளவு அழகு. மேலும் இந்த ரயில் நிலையங்களில் உள்ள மரங்களில் அதிகாலை மற்றும் பொழுது சாயும் நேரத்தில், அங்கிருக்கும் பறவைகள் அனைத்தும் ஒன்றாக சத்தமிடும். நூற்று கணக்கான பறவைகள் (பெரும்பாலும் கிளிகள்) attendance எடுக்கும் போல, "காலையில் போன முருகன் வந்துட்டானா? அப்போ பிரியா எங்கே? சுகுமார் இன்னும் திரும்ப வரலே?" போன்ற உரையாடல்கள் போல. இதை நீங்கள் அனுபவிக்க, மயிலாடுதுறைக்கு அதிகாலை போய் சேரும் ரயிலிலோ, மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை கிளம்பும் நீலகிரி எக்ஸ்பிரஸ்கு ஒரு மணிநேரம் முன்னரே சென்றாலோ பார்க்கலாம்.

முழுநிலா இருக்கும் போது இரவு பயணம் ஒரு வகை, அமாவாசை ஒட்டிய காலத்தில் இரவு பயணம் வேறு ஒரு வகை. அமாவாசை இருட்டில், நட்சத்திரங்கள் பளிச்சென்று மின்னும்! பெரும்பாலானோர் கீழ் பெர்த் விரும்புவார்கள், சிலர் தொந்தரவில்லாமல் தூங்குவதற்கு, upper பெர்த் விரும்புவார்கள். எனக்கு upper பெர்த் கிடைக்க, இந்த மாதிரி சயன-பிரியர்கள், தங்களது லோயர் பெர்த்தை என்னுடன் மாற்றி கொடுத்தால், என் ராஜ்ஜியத்தில் பாதி எழுதி கொடுத்துவிடுவேன். நான் ஒன்பதாவது படிக்கும் போது, குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றோம். நள்ளிரவு, புதுக்கோட்டையில் ரயில் நின்றது, சிக்னல் கிடைக்கவில்லை போல, ஒரு அரை மணி நேரம் அங்கே நின்றது. என்னுடன் பயணித்த அனைவரும் உறங்கி கொண்டிருக்க, நான் ரயிலிருந்து இறங்கி, ரயில்வே platform உள்ள கருங்கல் பெஞ்சில் படுத்து, திருவிளையாடல் சிவாஜி போல, வானத்தை பார்த்து கொண்ட ஞாபகம் என் நினைவிலிருந்து நீங்காது. அதே ரயில் கொஞ்ச நேரத்தில் தேவகோட்டை ரோடு சென்றடைந்ததும், அதே போல் நடந்தது.  கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? என்ற விளம்பரத்தில் வருவது போல கடவுள் என்னிடம் கண்ணடித்தார்.

சைடு லோயர் சீட் மீது எனக்கு ஒரு பிரத்யேக ஆசை. எதிரெதிரே உட்கார்ந்து கொண்டும், பேசி கொண்டும் வர அது ஒரு அற்புதமான அமைப்பு. மூன்று சீட்களில் நடுவில் உட்காரும் பயணம் எனக்கும் ஓரத்தில் அமர்ந்திருப்பவருக்கும் சிரமமானது. நான் அனேகமாக அணைத்து ரயில் நிலையங்களிலும் இறங்கி ஏறுவேன். மேலும் சில இடங்களில் நான் கதவருகே நிற்க ஆசை படுவேன். முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு முன் வரும் கரும்பாலை வாசம் பிடிக்க, பாம்பன் பாலத்தில் இருந்து கடலை காண, கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்று பாலத்தில், திருப்பதி செல்லும் வழியில் ஏகாம்பரக்குப்பம் எனும் ரயில் நிலையத்தை காண (அந்த ரயில் நிலையத்தின் ஒரு platformக்கும் மற்றொரு platformக்கும் உயரம் அதிகம் இருக்கும். திருநெல்வேலி முதல் செங்கோட்டை செல்லும் வழியெங்கும் என்று பல நுட்பமான பயண விவரங்கள் உள்ளது. இவை அனைத்தும் மற்றொருவர் கண்ணுக்கு புலப்படாமல் போகலாம், எனக்கு இதெல்லாம் முக்கியமானவை.  

அதே போல், ரயில் நிலையங்களின் அமைப்பு என்னை ஈர்க்கும். நான் விரும்பி செல்லும் ஊர்களில் மைசூரும், கொடைகானலும் முக்கியமானவை. கோடை ரோடு ரயில் நிலையமே என்னை உற்சாக படுத்திவிடும். மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை நிறைய கடைகள் இல்லாமல், வீடுகள் அதிகம் இருக்கும் residential பகுதியில் அமைந்திருப்பது ஆச்சரியமே. திட்டை என்னும் ஊரின் ரயில் நிலையத்தை வெளியிலிருந்து பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும். திருவாலங்காடு ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து, ஷேர் ஆட்டோ பிடித்து கோவில் செய்ய வாகாக இருக்கும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல முறை ஸ்கூட்டர் நிறுத்தி விட்டு ரயில் ஏறி இருக்கிறேன். திருச்சூர் ரயில் நிலைய வாயிலில் ஆட்டோக்கள் அனைத்தும் வரிசையாக வந்து பயணிகளை ஏற்றி செல்வது ஆச்சரிய ஒழுக்கம்.

நெடுந்தூர ரயில் பயணங்கள் பெரும்பாலும் எனக்கு கிடைத்ததில்லை. ஒரு முறை அலுவலக பணிக்காக மும்பை சென்றேன், 24 மணி நேரம்! கூட பயணித்த இருவரில் ஒருவர், எனக்கு நேர் எதிர் எண்ண ஓட்டம் கொண்டவர், ஜன்னலின் திரைசீலையை மூடிவிட்டு, பயணத்தின் பெரும்பாலான நேரம் உறங்கி கொண்டே வந்தார், வெறுத்து போனேன். மும்பைக்கு பத்து பதினைந்து முறைக்கு மேல் விமானத்தில் சென்றிருக்கிறேன், ஆனாலும் அந்த ரயில் பயணம் மட்டும் நினைவில் இருக்கிறது. வேறொரு முறை குடும்பத்துடன் நாக்பூர் செல்லும் வாய்ப்பு அமைந்தது. காலை பில்டர் காபி குடிக்க முன்னரே திட்டமிட்டு கும்பகோணம் decotion பாட்டில் ஒன்றை வாங்கி விட்டோம். நானும் என் மனைவியும் கிட்டத்தட்ட பத்து பெட்டிகள் தாண்டி இருந்த pantry க்கு சென்று சூடான பால் வாங்க முயற்சி செய்தோம். அந்த ஊழியருக்கு ஹிந்தி மட்டுமே தெரிந்திருந்தது. நான் பேசியது ஹிந்தியே இல்லை. ஏதோ வகையில் சமாளித்து ஒரு நல்ல காபி கிடைத்தது. 

இப்பொழுது எல்லாம், என் பிள்ளைகளுக்கு ரயில் பயணங்களை பற்றிய கதைகளை இரவு கூறுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ICF ரயில் அருங்காட்சியகம் (museum) ரெண்டு மூன்று முறை சென்றிருக்கிறோம். mysoreல் உள்ள அருங்காட்சியகமும் அருமையாக இருக்கிறது. அங்கே உள்ள toy trainல் சுற்றி இருக்கிறோம்.  சிக்மகளூர் காந்தி பூங்காவிலும், ஊட்டி ஏரியை சுற்றியும், கோவை காந்தி பூங்காவிலும் Toy Trainல்  சென்றிருக்கிறோம். சிறு வயதில் பள்ளி இன்ப சுற்றுலாவில் எங்கோ ஒரு இடத்தில்  toy trainல் சுற்றும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி அப்படியே இருக்கிறது. முன்பகுதியில் நான் சொன்ன இரண்டு ரயில்களை இணைக்கும் coupling முறையை ஈரோடு ரயில் நிலையத்தில் என் பிள்ளைகளுக்கு உற்சாகத்துடன் காண்பித்தேன். 

சுஜாதாவின் "ஓடாதே" எனும் கதையின் இடையில், காட்பாடி ரயில் நிலையத்தில் அந்த கதாநாயகனும் கதாநாயகியும் காத்திருக்க, "கர்நாடகா எக்ஸ்பிரஸ் என்றைக்கோ புதுதில்லியில் கிளம்பி, நாயடி பட்டு லேட்டாக வந்தது" என்று எழுதியிருப்பார். அந்த வரியை படித்து நான் ஒரு அரை மணி நேரம் சிரித்திருக்கிறேன். பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களின் அனைத்து ரயில் ஜோக்குகளை பல முறை கேட்டு சிரித்திருக்கிறேன். mission impossible படத்தில் வரும் ரயில் stunt sequence என்னை மிகவும் கவர்ந்தது.

சென்னையின் புறநகர் ரயில் பயணங்களில் என்னுடன் சேர்ந்து கொள்வது என் மாமா. நானும் அவரும், பழமையான கோயில்களுக்கு செல்வோம். அவ்வாறு திரும்பி வரும் பொழுது, ஒரு முறை, "Situational irreverence theory" படிக்காமலேயே, சுற்றுசூழலை உதறி தள்ளி, ரயில் பெட்டியின் கதவருகில் உட்கார்ந்து கொண்டு இளையராஜா பாடல்களை பாட ஆரம்பித்தோம். பக்கத்து பெட்டி பயணிகள் எங்களை யாசகர்களாக எண்ணியிருப்பதை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை.

இந்த "Feel-good" பதிவுக்கு முடிவுரை எழுதாமல், AI (செயற்கை நுண்ணறிவு) மூலம், "Summarise this blog" என்ற prompt கொடுத்தால்: ரயில் - சாகேத் ராம் - நாலடியார் - மலைக்கோட்டை - அட்டவணை - coupling - மீன்கொத்தி - இரவுநேர நட்சத்திரங்கள் - toy train - சுஜாதா - irreverence - மகிழ்ச்சி என்று தருமோ என்னவோ!  

Sunday, 13 July 2025

அற்புதம்

 

காட்சி ஒன்று

இரண்டாவது பீரியட் பெல் அடிக்கும் முன்னே, தலைமையாசிரியர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெஞ்சமின் அந்த பட்டியலை வகுப்பு ஆசிரியர் மேரி அவர்களிடம் நீட்டினார். அதில் நான்கைந்து ரோல் நம்பர்கள் இடம்பெற்றன. அதை வாசித்தவுடன், அந்த மாணவர்கள் பள்ளி அலுவலகத்திற்கு வரவழைக்கப் பட்டனர். அங்கே மற்ற வகுப்பை சேர்ந்தவர்களும் இருந்தனர், மொத்தம் பனிரெண்டு மாணவர்கள். "பள்ளி திறந்து ஒரு மாதத்திற்கு மேலே ஆகுது, ஏன் இன்னும் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை? இந்த எட்டு பேர் இந்த பக்கம் நில்லுங்க, நீங்க இன்னும் பணம் செலுத்தி புத்தகங்கள் வாங்கலியே?". அத்தனை மாணவர்கள் முகத்திலும் விடையே இல்லை, வாடி போய் இருந்தது.  "உங்கள் அப்பா - அம்மாவை நாளைக்குள் பணம் செலுத்த சொல்லுங்க" என்று சொல்லி அவர்களை வகுப்புக்கு அனுப்பி வைக்க, அங்கிருந்து கிளம்பினால் போதுமென்று அனைத்து மாணவர்களும் தங்களுடைய வகுப்பிற்கு ஓடினர். மேரி என்ற ஆசிரியை staff ரூமில் கவலையுடன் அமர்ந்திருந்தார். "மேரி நீ ஏன் இன்னும் சாப்பிடல?" என்று french ஆசிரியை சுஜாதா கேள்வி கேட்க, மேரி "என் வகுப்பில் சில மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தவே இல்லை, அலுவலகத்தில் இருந்து தினம் கேட்கறாங்க". "அதுக்கென்ன, அவங்க பெற்றோர்க்கு தகவல் சொல்ல வேண்டியது தானே?" "அந்த குழந்தைங்க பெரும்பாலும் "single parent children". ஒவ்வொருத்தர் குடும்ப கதையும் ஒவ்வொரு மாதிரி இருக்கு" என்று மேரி வருத்தப்பட்டார். இதை படிக்கும் போது "ஐயோ கடவுளே" என்று நீங்கள் நினைத்தால், அதே போல் தான் சுஜாதா மேடமும் நினைத்தார்.

 

காட்சி இரண்டு

மறுநாள் அதே இரண்டாவது பீரியட், அதே பெஞ்சமின், அதே ரோல் நம்பர். மாணவர்கள் தயக்கத்துடன் எழுந்து கொள்ள: "நீங்க அலுவலகத்துக்கு போய் நீங்க பள்ளி கட்டணம் கட்டிய ரசீதை உடனே வாங்கிக்குங்க. புத்தகத்துக்கு பணம் கட்டியவங்க, அதையும் வாங்கிண்டு வாங்க" என்றார். மாணவர்களுக்கு நடந்ததென்றே புரியவில்லை!

 

பாத்திரங்கள் அறிமுகம்

சுஜாதா மேடம் (1999ல் நான் பள்ளி படிப்பை முடித்தேன்)

நான் "French" மொழியை தேர்ந்தெடுக்காததால் சுஜாதா மேடம் வகுப்பில் இருந்ததே இல்லை. பள்ளியில் குடியரசு தினம், ஸ்போர்ட்ஸ் டே, பரிசளிப்பு தினம் போன்ற நிகழ்ச்சிகளில் நான் அறிவிப்பாளனாகவோ, prayer பாடும் குழுவிலோ, நன்றியுரை, வரவேற்புரை என்று ஏதாவது ஒரு எடுபுடி வேலையிலாவது இருப்பேன். சுஜாதா மேடம் இதற்கெல்லாம் பொறுப்பாசிரியராக இருப்பார், அவர்களுடன் என்னுடைய உரையாடல்கள் அந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் நடக்கும் போது மட்டுமே. அந்த குழுவில் "the usual suspects" ஆக இருப்பதும் என் நண்பர்களே. அவர்கள் சுஜாதா மேடம் வகுப்பில் பயில்வதனால்,  சுஜாதா மேடம் மாணவர்களிடம் நேசத்துடன் அணுகும் விதத்தை விவரிப்பார்கள்.

 

பாலாஜி

பாலாஜி என்னுடைய பள்ளியில் என் வகுப்பில் படித்தவன், பிறகு நாங்கள் தொடங்கிய கிரிக்கெட் அணியிலிருந்து வெளியேறாமலும், ஒய்வு பெறாமலும் இருக்கும் இருவரில் ஒருவன் (இன்னொருவன் நான் தான்). அசாத்திய தைரியசாலி, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் இருக்கும் குணமுடையவன். நண்பர்களின் திருமணத்திற்கு பரிசு பொருள் வாங்குதல், கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டால், "இன்று உன் பேர் சங்கிலி இல்ல, கங்குலி" வடிவேல் காமெடி பாணியில் திடீர் நியமனம் செய்தல், முன்னாள் மாணவர்களின் நிகழ்ச்சி ஏற்பாடு, வேலை தேடுபவர்களின் CV நண்பர்களுக்கு whatsapp மூலம் அனுப்புதல் போன்ற உபத்திரம் மிக்க வேலைகளை சற்றும் சலிக்காமல் செய்யும் குணமுடையவன். நான் அவனை 1997ல் சந்திக்கும் போது இருந்த உற்சாகத்தை தொலைக்காமல் வைத்திருப்பவன்.

 

ஷங்கர் ராமன்

நான் CA பயின்ற போது, articleship என்ற மூன்று வருடங்கள் நடைமுறை பயிற்சி முறை இருந்தது. ஒரு பட்டைய கணக்காளரிடமோ (Chartered Accountant) அல்லது பட்டைய கணக்காளர்கள் கொண்ட நிறுவனத்திடமோ பயிற்சி பெற வேண்டும். நான் 2003 ஆண்டிலிருந்து 2006 வரை, ஒரு சர்வதேச நிறுவனத்தில் பயிற்சி பெற்றேன். அப்போது ஷங்கர் ராமன் என்பவர் அதில் Senior Manager ஆக பணி புரிந்தார். நான் பயிற்சி பெற்ற முதல் இரண்டு வருடங்கள் அவர் அமெரிக்காவில் இருந்தார், பின்னர் சென்னைக்கு வந்தார். நாங்கள் செய்யும் Audit வேலையில் எந்த சந்தேகம் வந்தாலும் நாங்கள் அணுகும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். நாங்கள் மாணவர்கள் தானே என்று எங்களை ஏளனமாக பார்க்க மாட்டார், “வெட்டு ஒன்று - துண்டு ரெண்டு என்று பேசுபவர். (Audit துறையில் இவ்வாறு பேசுபவவர்கள் மிகவும் அரிதே, பெரும்பாலானவர்கள் குன்ஸாகவே பேசுவார்கள்). 2006 க்கு பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை, இன்று ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை குழு பொறுப்பில் உள்ள அவர், நான் அவ்வப்போது போடும் உருப்படியான whatsapp status, social மீடியா அறிவிப்புகளுக்கு பதிலளிப்பார்.

 

 

வரதன்

2006 முதல் 2009 வரை நான் வேலை செய்த வங்கியில் ஒரு உயர் பொறுப்பில் இருந்தவர், ரொம்ப நேராக பேசுபவர், எளிமையானவர். நகரத்தின் நடுவே இருந்த எங்கள் வங்கியின் அலுவலகம், புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டது. அப்போதெல்லாம் அவருடன் காரில் தொற்றிக்கொண்டு செல்வேன். செல்லும் வழியெல்லாம் வெவ்வேறு செய்திகளை பற்றி பேசுவோம். அலுவலக வேலையில் என்னிடம் இருந்த பலவீனங்களை ஒளிவு மறைவின்றி சொல்லி திருத்தி கொள்ள சொல்வார். நான் இல்லாத போது தான் என்னை பற்றி பாராட்டுவார் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் வாழ்த்து whatsapp மூலம் தெரிவிப்பதை தவிர கடந்த 16 வருடங்களில் அவரை நான் நேரில் சந்திக்கவே இல்லை.

 

நாகமஹந்த்

என் மாணவனின் திருமணத்திற்கு சென்ற போது (திருமணம் திருவரங்கத்தில் நடந்தது), எனக்கு தங்கும் விடுதி, வாகனம் ஏற்பாடுகளுக்காக அவனுடைய நண்பனான நாகமஹந்தின் தொலைபேசி எண்ணை கொடுத்தான். நான் அங்கு தங்கவில்லை. நான் வெவ்வேறு பணிகள் மற்றும் கோவில் தரிசனம் செய்து முடித்து, சரியாக முகூர்த்த நேரத்திற்கு மட்டுமே சென்றேன். நாகமஹந்த்திடம், ஒரே ஒரு முறை, திருமண மண்டபத்திற்கு செல்லும் வழி கேட்க பேசினேன். அவனை திருமணத்தில் சந்தித்த ஞாபகம் கூட இல்லை. இது நடந்தது சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்.

 

கிரிக்கெட் தொடர்பு

பிரசன்னா என்பவன் எங்கள் கிரிக்கெட் அணியில் முன்னொரு காலத்தில் விளையாடியவன். உடல்நிலை, வேலை சம்பந்தமான சிக்கல்கள் பலவற்றை வாழ்க்கை கொடுக்க, அதையெல்லாம் திடமாக சந்தித்து அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருபவன். வாழ்வை போராடி வெல்லும் எண்ணத்தை அவனிடம் இருந்து கற்று கொள்ளலாம். பெரும்பாலும் தொலைபேசியில் ஓரிருரண்டு வாரத்திற்கு ஒரு முறை பேசுவோம்.

 

சாய் எங்கள் தற்போதைய கிரிக்கெட் அணியின் பும்ரா. விளையாட்டு மைதானத்திலும், என் வகுப்பறையிலும் நான் என்னை முழுவதாக மறந்து விடுவேன். மைதானத்தில் விளையாடும் போது, உங்கள் உண்மையான பண்புகளை மறக்கவே முடியாது, தானாக வெளிப்படும் என்று என் தம்பி சொல்வதுண்டு. அதற்கு உதாரணமானவன் சாய். நேரம் தவறாமல் வருவது, ஈகோ என்ற உணர்வில்லாமல் அனைவரிடமும் பழகுவது என தன்னுடைய இயல்பிலேயே அனைவரிடம் நட்பு கொள்வான்.

 

என் முன்னாள் மாணவர்கள்

 

CA தேர்வை தாண்டுவதில் சிலருக்கு பிரத்யேக சிக்கல் இருக்கும், அது மற்றவர்களுக்கு புரியாது. கண்ணில் விழுந்த சிறிய தூசி போல. மற்றவர்கள் "ஊதி விடு" சரியாகி விடும் என்று அலட்சியமாக சொல்லிவிட்டு செல்வார்கள். சிரமத்திற்கு உள்ளானவர்களுக்கே அது எவ்வளவு உறுத்தும் என்று தெரியும். என்னுடைய வகுப்பில் படித்த சில மாணவர்களிடம், இந்த தொந்தரவை புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில், நான் கற்று கொண்ட சில யுக்திகளை கடத்தியுள்ளேன். அவர்களின் சொந்த முயற்சியினால் தேர்வில் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருக்கும் மாணவர்களில் கீழ்க்காண்பவர்களும் உண்டு:

 

சித்தார்த்: இவன் என் வகுப்பிற்கு வந்தது நிச்சயம் பத்து முதல் பனிரெண்டு வருடங்கள் இருக்கும். சமீபத்தில் ஒரு உணவகத்தில் சந்தித்த போது, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறினான்.

 

கோபால் மற்றும் ஸ்ரீவித்யா: 2006ல் தொடங்கிய என்னுடைய முதல் வகுப்பை சேர்ந்தவன் கோபால். அவனும் அவன் மனைவி ஸ்ரீவித்யாவும் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருபவர்கள். வரி சம்பந்த பட்ட எந்த ஒரு சந்தேகத்திற்கும் நான் இவர்களை தான் அணுகுவேன். இருவரும் பணிவான குணமடையவர்கள்.

 

பதஞ்சலி: CA தேர்வு வெற்றி பெற்று, தனக்கு விரும்பிய துறையில் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிபுரிபவன், துடிப்பான இளைஞன். பத்து நாட்களுக்கு ஒரு முறை அவன் கண்ணில் நான் பட்டு விடுவேன்.

 

சங்கரன்: 2012 அல்லது 2013 காலகட்டத்தில் என் வகுப்பில் படித்தான், பிறகு அவனுடன் எந்த தொடர்பும் இல்லை.

 

இரண்டு காட்சிகளுக்கு இடையே நடந்தது

சுஜாதா மேடம், இந்த மாணவர்களின் தேவைகளை பற்றி எனக்கு அனுப்பி, "ஏதாவது செய்ய முடியுமா என்று பார் என்று whatsapp செய்தி அனுப்பினார். நான் முறையே, இந்த வேலைக்கே அளவெடுத்து செய்யப்பட்ட, பாலாஜிக்கு அனுப்பினேன். அவன் முன்னாள் மாணவர்கள் சிலரிடமும், எங்கள் பொது நண்பர்களான ஸ்ரீகுமார் மற்றும் பைதிக் அவர்களிடமும் உதவி பெற்று கொடுத்தான்.

நான் மேலே குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் வெவ்வேறு காலகட்டத்தில் தொடர்பில் இருந்தாலும், அன்றாட உரையாடல்கள் இல்லை. சிலரிடம் வருட கணக்கில் தொடர்பே இல்லை என்பதை நீங்கள் உணரலாம். மாணவர்களுக்கு உதவி தேவைஎன்று  நான் வைத்த whatsapp status இவர்கள் அனைவரின் கண்ணில் பட்டு, அதற்கு உடனடியாக அவர்கள் நானும் என் பங்கிற்கு பணம் அனுப்புகிறேன் என்று கூறியது, சித்தார்த் தன் சகோதரனிடமும் அவன் நண்பர்களிடமும் தகவல் கூறி உதவி பெற்று கொடுத்தது, அந்த மாணவர்களை பார்க்காமல், யாரென்றே தெரியாமல், அனைவரும் உதவிக்கரம் நீட்டியது, ஒரு இரண்டு மூன்று மணி நேரத்தில் பள்ளியின் வங்கி கணக்கில் செலுத்தியது,  என நடந்ததை நினைத்து பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. “There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle.”  என்பது நிரூபணம் ஆகிறது. இந்த பிரபஞ்சத்தின் பெரும் சக்தியிடம் (Super intelligent design) சரணடைவோம்.

பின்குறிப்பு இல்லாம முடிக்கவே மாட்டேன்!

நாடோடிகள் படம் climax: மாலை நேர நடைப்பயிற்சி முடித்து விட்டு, மொட்டைமாடியில் அமர்ந்து கொண்டு twitterல் நியூஸ் மேய ஆரம்பித்தேன் (நான் twitterல் நியூஸ் மற்றும் மீம்ஸ் பார்ப்பதற்கு மட்டுமே உபயோகிப்பவன்). யாரென்றே தெரியாமல், ஒரு random tweet கண்ணில் பட்டது - ஒரு  இளநிலை பட்டம் பெற்ற மாணவிக்கு, முதுநிலை பட்டபடிப்பிற்க்கான நுழைவு தேர்வில் வெற்றி கிடைத்து - புத்தகம், தங்கும் விடுதி போன்ற செலவுக்கு பணம் தேவை. Equaliser படத்தை பல முறை பார்த்து, Random act of kindness மேல் நம்பிக்கை வைத்த எனக்கு அது Godsent தருணங்களில் ஒன்றாக பட்டது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை அந்த மாணவிக்கு சொல்லியனுப்பி, மிக சிறிய பண உதவியையும் செய்தேன். 

ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...